ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் மிக வேகமாக பரவி இதுவரை 28 பேர் உயிரிழந்த நிலையில் அம்மாநில முன்னாள் முதலமைச்சருக்கே பன்றிக்காய்ச்சல் நோய் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தின் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் பன்றி காய்ச்சல் நோய் காரணமாக அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது, கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்ததால் உடல் பரிசோதனை செய்ததாகவும், பரிசோதனையில் தனக்கு பன்றிக்காய்ச்சலுக்கு காரணமான எச்1என்1 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், தற்போது மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சை காரணமாக உடல்நலம் தேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அசோக் கெலாட்டின் உதவியாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ‘கடந்த 30-ந்தேதி டெல்லி சட்டசபைத்தேர்தலுக்காக அசோக் கெலாட் பிரசாரம் செய்தார். டெல்லியில் இருந்து வந்ததில் இருந்தே தீராத காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் தேறி வருகிறது’ என்று தெரிவித்தார்.ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கே பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளதுஇ.