நேற்று அபுதாபியில் நடந்த விறுவிறுப்பான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் இரு அணிகளும் சம அளவில் ரன் அடித்ததால் டை ஆனது. பின்னர் நடந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற காரணத்தால் ராஜஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் குவித்தது. கேப்டன் வாட்சன் 33 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 72 ரன்களும் எடுத்தனர். சாம்சன் 20 ரன்களும், ஸ்மித் 19 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியின் வினய்குமார் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி நிலையில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கவுதம் காம்பீர் நல்ல தொடக்கத்தை கொடுத்தார். அவர் 44 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய யாதவ் 31 ரன்களும், ஷாகிப் ஹாசன் 29 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணியும் 152 ரன்கள் மட்டுமே எடுத்ததால் போட்டி “டை” ஆனது. பின்னர் வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் நடைமுறை செயல்படுத்தப்பட்டது.சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 11 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான ராஜஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது.
இந்த போட்டியில் மிக அபாரமாக பந்துவீசிய ராஜஸ்தான் அணியின் பால்க்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.