டெல்லியில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ராஜஸ்தான் அணியிடம் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த டெல்லி, இன்று மீண்டும் இரண்டாவது முறையாக தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 20 ஓவர்களில் 184 ரன்கள் குவித்தது. கேப்டன் டுமினி 44 ரன்கள், அகர்வால் 37 ரன்கள், ஐயர் 40 ரன்கள் யுவராஜ்சிங் 27 மற்றும் மாத்யூஸ் 27 ரன்கள் அடித்தனர்.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர் ரஹானே கை கொடுத்தார். அவர் 39 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஹூடா நல்ல கம்பெனி கொடுத்து 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் கடைசி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் முதல் ஐந்து பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தனர். எனவே கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் மட்டுமே வெற்றி என்ற விறுவிறுப்பான கட்டத்தில் ராஜஸ்தான் அணியில் செளதி பவுண்டரி அடித்து தனது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். ஹூடா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.