பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய நூல்கள் இதுவரை வார, மாத இதழ்களிலும், தனிப்புத்தககங்களாகவும் வெளிவந்தன. முதல்முறையாக ராஜேஷ்குமார் எழுதிய க்ரைம் நாவல் ஒன்று டிஜிட்டலில் வெளியாகியுள்ளது. இந்த மின்னூலின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
பிரபல இணையதளங்களில் உள்ள செய்திகளை தொகுத்து வழங்கி வரும் ‘நியூஸ்ஹண்ட்’, ராஜேஷ்குமார் எழுதிய ‘பூவில் செய்த ஆயுதம்’ என்ற நாவலை மின்னூலாக வெளியிட்டுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் பேசிய காந்தி கண்ணதாசன், “‘தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த படியான மென்புத்தக வடிவத்தை நான் மனதார வரவேற்கிறேன். இன்றைக்கு உலகத்தில் எங்கு தேடியும் கிடைக்காத எத்தனையோ அருமையான புத்தகங்கள் எல்லாம் இணையத்தில் மென்புத்தகமாக மிக எளிதில் கிடைக்கிறது. இன்றைய தலைமுறையினர் அதிகமானோர் இதை விரும்பி படிக்கிறார்கள்.
இன்றைக்கு செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் மென்புத்தகம் படித்தால் அவர்களை 30 வயதுக்கு குறைந்தவர்கள் என்றும், கையில் புத்தகத்தை வைத்து படித்தால் அவர்களை 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் சொல்லும் அளவுக்கு மென்புத்தகங்கள் இளைய தலைமுறையினரை மிக எளிதில் சென்றடைகிறது. இது இன்னும் வருங்காலத்தில் பலவித மாற்றங்களை அடையவும் வாய்ப்புள்ளது” என்றார்.
இதையடுத்து பேசிய எழுத்தாளர் ராஜேஷ்குமார், ”பதிப்புத்துறையில் தொழில்நுட்பத்திய வருகை மற்றும் தாக்கத்தை நான் வரவேற்பவன். எனது 30 ஆண்டுகால எழுத்துலக வாழ்க்கையில் முதன்முறையாக பிரத்யேக மின்னூலை வெளியிடுகிறேன்.
தற்போது அவள் விகடனில் ‘நள்ளிரவு வானவில்’ என்ற பெண்களுக்கான க்ரைம் நாவலை எழுதி வருகிறேன். அது இப்போதே பலதரப்பட்ட மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதையும் இதேபோல் மின்னூலாக வெளியிடவே விரும்புகிறேன். இதன்மூலமாக இன்றைய தொழில்நுட்ப உலகில் மிக எளிதில் எல்லா தரப்பு மக்களையும் என் நாவல்கள் சென்றடையும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்