கோச்சடையான் திரைப்படம் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருப்பதால் தயாரிப்பு தரப்பு கூறியபடி மே 23ஆம் தேதியும் வெளிவருவது கடினம் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
மாற்றான் திரைப்படத்தை விநியோகம் செய்த வகையில் ரூ.12 கோடி பாக்கி மற்றும் கோச்சடையான் திரைப்படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை 26 கோடி ரூபாய், ஆகமொத்தம் ரூ. 38 கோடியை செட்டில் செய்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என்று சம்மந்தப்பட்டவர்கள் கறாராக கூறியதால் அதிர்ச்சி அடைந்த ஈராஸ் நிறுவனம், பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு ரூ.20 கோடியை புரட்டி கொடுத்துவிட்டு, மீதியை ரிலீஸுக்கு பின்னர் கொடுத்துவிடுவதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தியது.
எல்லாம் சரியாக நடந்துகொண்டிருக்கும்போது, திடீரென சென்னையில் உள்ள பிரபல வங்கி ஒன்று கோச்சடையான் தயாரிப்பாளர் தங்கள் கிளையில் வாங்கிய ரூ.21 கோடி பணத்தை செலுத்திவிட்டு, படத்தை ரிலீஸ் செய்யவும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதால் ஈராஸ் நிறுவனம் ஆடிப்போய்விட்டது. எனவேதான் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப காரணம் என்ற காரணத்தை கூறி ரிலீஸை தள்ளி வைத்தது. வங்கி கடனுக்கு ரஜினியிடம் இருந்து உதவியை எதிர்பார்த்தது ஈராஸ் நிறுவனம். ஆனால் ரஜினி இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கறாராக அறிவித்துவிட்டார்.
மேலும் சமீபத்தில் ரிலீஸ் ஆன ஸ்பைடர்மேன் நல்ல வசூலை தந்து கொண்டுள்ளது. மேலும் மே 16ஆம் தேதி ரிலீஸாகவுள்ள காட்ஸில்லா 3D படமும் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. நன்றாக ஓடும் இந்த படங்களை தூக்க வேண்டுமா? என தியேட்டர் அதிபர்கள் யோசிக்கின்றனர்.
கோச்சடையான் பிரச்சனைகள் தொடர்கதையாக போய்க்கொண்டு இருப்பதால், ரிலீஸ் தேதி இன்னும் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. போகிற போக்கை பார்த்தால் கோச்சடையானுக்கு முன்னர் லிங்கா ரிலீஸ் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.