காவிரியின் குறுக்கே அணை கட்டுவதால் தமிழகம் பாதிக்காது. ரஜினியின் சகோதரர் பேட்டி

sathya narayana சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படத்தின் ரிலீஸ் நாள் நெருங்குவதால் அந்த படம் வெற்றியடைய சிறப்பு வழிபாடு செய்ய ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் நேற்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்திருந்தார். அதன்பின்னர் ரஜினி ரசிகர் ஒருவரது வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருச்சி புறப்பட்டார்.

பின்னர் மாலையில் மீண்டும் பெங்களூர் திரும்பும் முன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது ”ரஜினியை தங்கள் இயக்கத்துக்கு வரச்சொல்லி பா.ஜ.க., தி.மு.க., காங்கிரஸ் உள்பட எல்லா கட்சி தலைவர்களும் கூப்பிடுகிறார்கள். ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டால் மற்ற கட்சியை பற்றி விமர்சிக்க வேண்டி வரும். அரசியலில் நேர்மையாக இருக்க முடியாது.

அதனால், ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது. தமிழ்நாடு ஒரு புண்ணிய பூமி. ரஜினி, தமிழ்நாட்டின் குழந்தை. அந்த குழந்தைக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆசீர்வாதம் வேண்டும். ரஜினி தமிழக மக்களை மறக்க மாட்டார். தமிழக மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உள்ளது” என்றார்.

sathya narayana 1

மேலும், காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட முயற்சிப்பது குறித்து கேட்டபோது, ”தமிழ் நாட்டுக்கும் தண்ணீர் வேண்டும், கர்நாடகத்துக்கும் தண்ணீர் வேண்டும. தமிழ் நாட்டிலும் தண்ணீர் கேட்கிறார்கள், கர்நாடகத்திலும் தண்ணீர் கேட்கிறார்கள். இரு மாநிலத்திற்கும் தண்ணீர் தேவை இருக்கிறது. இருவரும் அணை கட்டுகிறார்கள். கர்நாடகத்தில் அணை கட்டுவதால் தமிழக மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்” என்றார்.

காவிரியில் கர்நாடக மாநிலம் அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்கும் வேளையில் ரஜினியின் சகோதரர் கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

Leave a Reply