ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்ததை தொடர்ந்து, மத்திய அரசு, முதல்வரின் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூவரின் தண்டனையை ரத்து செய்யக்கூடாது என வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் இன்று அறிவித்துள்ளார்.
தீர்ப்பு மூவருக்கும் சாதகமாக இருந்தால், வரும் தேர்தலில் அந்த தீர்ப்பு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா மூவரையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். பேரறிவாளன் தாயாரையும் நேரில் சந்தித்து கண்டிப்பாக மூவர் விடுதலைக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்திருக்கின்றார். ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு, இந்த விடுதலையை அரசியல்ரீதியாக எடுத்துக்கொண்டு மூவரையும் விடுதலை செய்யக்கூடாது என வழக்கு தொடுத்துள்ளது.
ஒருவேளை இந்தவழக்கில் மூவரையும் விடுதலை செய்யுமாறு தீர்ப்பு வந்தால் அது ஜெயலலிதாவுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்ததாக அமையும். கண்டிப்பாக இந்த விஷயம் தேர்தல் நேரத்தில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். உச்சநீதிபதியின் இந்த அறிவிப்பு இன்றே எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
இன்று சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, நீதிபதியின் இந்த அறிவிப்பை குறைகூறி பேசியுள்ளார். மோடியின் அலையால் பாரதிய ஜனதா கூட்டணி மிக எளிதாக வெற்றி பெற்றுவிடும் என கணக்கு போட்ட கட்சிகள் நீதிபதியின் அறிவிப்பால் நடுங்கி போயுள்ளன. மோடியின் அலையைவிட ஈழத்தமிழர் சுனாமி எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் அறிவார்கள்.
இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பமாக மூவர் விடுதலை குறித்த தீர்ப்பு வரவுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சென்னை சீனியர் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில் “ஒருவேளை மூவருக்கும் சாதகமான தீர்ப்பு வந்துவிட்டால், கண்டிப்பாக அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார். 25ஆம் தேதிக்குள் தீர்ப்பு என்று நீதிபதி அறிவித்திருப்பதால், தீர்ப்பு 23அல்லது 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனதெரிகிறது. தமிழகத்தில் 24ஆம் தேதி தேர்தல் என்பது அனைவரும் அறிந்தவிஷயம் ஆகும்.