ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு தடை. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு தடை. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

rajiv gandhiராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, 7 பேர் விடுதலைக்கான தடையை நீக்க மறுத்துவிட்டது. மேலும், ஆயுள் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும் அதிரடியாக அறிவித்துள்ளதால், முருகன், நளினி உள்பட ஏழு பேரின் விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், “இந்த வழக்கில் இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தற்போதைக்கு மாற்ற விரும்பவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலைக்கான தடையை நீக்க முடியாது. ஆயுள் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை” என்றனர்.

தமிழக அரசு தரப்பில், ஆயுள் கைதிகள் அதிலும் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைபட்டிருக்கும் ஆயுள் கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரத்தை திருப்பியளிக்க வேண்டும் எனக் கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தனர்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தீர்ப்பளித்தது.

மேலும் இந்த மூவரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில், இந்த மூவருடன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏற்கெனவே ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

தமிழக அரசின் இந்த முடிவுக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதாவது ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால், வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று வாதிட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கும் தொடர்ந்தது.

முக்கியமான இந்த வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று மத்திய அரசு தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து, 7 பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

Leave a Reply