ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முருகன்,சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழுபேர்களின் விடுதலை குறித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், இன்று அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் ஏழுபேர்களும் விடுதலை ஆவார்கள் என தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த தீர்ப்பு தமிழகம் முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான 7 பேர் விடுதலை சம்மந்தப்பட்ட வழக்கில் இன்னும் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்றும், இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் 7 விதமான முக்கியமான விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது என்று கூறிய நீதிபதி, இதுபோன்ற வழக்கை முதல்முறையாக எதிர்கொள்வதால். இன்னும் சில காலம் எடுத்துக்கொண்டு அதிகபட்சமாக 3 மாதங்களில் விசாரித்து முடிக்க அரசியல் சாசன அமர்வுக்கு உத்தரவிட்டுள்ளது. அதுவரை தமிழக அரசின் முடிவுக்கு தடை நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.