சமீபத்தில் நோக்கியா நிறுவனம் தனது மொபைல் போன் பிரிவை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 7.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்த பின்னர் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் முதல் கட்டமாக நோக்கிய நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாகியை நியமனம் செய்துள்ளது.
புதிய தலைமை நிர்வாகியாக இந்தியாவை சேர்ந்த ராஜீவ் சூரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை மறுநாள் மே 1ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
ராஜீவ் சூரி கடந்த 1995ஆம் ஆண்டு முதல் நோக்கியா நிறுவனத்தில் பல உயர் பதவிகளில் இருந்துள்ளார். தற்போது நோக்கியா தொலைத்தொடர்பு கருவிகள் வர்த்தக பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2007 முதல் 2009 வரை நோக்கியாவின் சீமென்ஸ் நெட்வொர்க் பிரிவில் மிகச்சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டு பெற்றவர். மேலும், இவர் குவைத், பின்லாந்து, லண்டன், நைஜீரியா, ஜெர்மனி மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள நோக்கியாவில் கிளைகளில் பணிபுரிந்துளார்.
பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த நோக்கியா நெட்வொர்க் யூனிட், ராஜீவ் சூரி பதவியேற்றவுடன் அவர் செய்த அதிரடி நடவடிக்கை காரணமாக லாபத்தை நோக்கி நிறுவனம் திரும்பியது. இவர் செலவுகளைக் குறைத்து கடந்த 2012ல் லாப பாதைக்கு நிறுவனத்தை திருப்பினார்.
ராஜீவ் சூரி இந்தியாவின் மணிபால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்தவர். எம்.பி.ஏ. மற்றும் முதுகலை பட்டம் ஏதும் படிக்காமல் சாதனைகளை படைத்த மிகச் சில கார்ப்பரேட் தலைமை நிர்வாகிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.