இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீரை பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது. ராஜ்நாத் சிங்

இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீரை பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது. ராஜ்நாத் சிங்

rajnathஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறை, கலவரங்கள் காரணமாக தடை உத்தரவு 33 நாட்களாக அமலில் உள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லி மேல்சபையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியற்ற நிலை நீடிப்பது கவலை அளிக்கிறது. அந்த மாநில மக்களின் வலியை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். மாநில சட்டம் ஒழுங்கை ராணுவத்திடம் ஒப்படைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் வதந்தி தான். காஷ்மீர் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று நான் ஒரு போதும் கூறவில்லை. அதே நேரத்தில் அங்கு அமைதியை ஏற்படுத்த கடந்த மாதம் 23, 24-ந் தேதிகளில் நான் ஸ்ரீநகர், அனந்த்நாக் ஆகிய இடங்களுக்கு சென்றேன். அந்த மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினரை சந்தித்து பேசினேன். அதன் பிறகும் அங்கு அமைதி திரும்பவில்லை.

காஷ்மீரில் அமைதி திரும்ப பாதுகாப்பு படையினர் அதிகபட்ச பொறுமை காக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்காக நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பதையும், இந்தியாவுக்கு எதிராக கோஷம் போடுவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது.

இந்த பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் காஷ்மீரை யாருக்கும் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. அங்கு தொடர்ந்து கலவரம் ஏற்படுவதற்கு பாகிஸ்தானின் தலையீடு தான் காரணம். எந்த நாட்டின் தலையீடு இருந்தாலும் இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீரை பிரிக்க எந்த சக்தியாலும் முடியாது என்று கூறினார்.

Leave a Reply