தீவிரவாதிகளின் துணை கொண்டு மறைமுக போர் செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் தனது முயற்சியை கைவிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பயங்கரவாத ஒழிப்பு குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் ஒன்று நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் இந்த கருத்தரை நேற்று துவக்கி வைத்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்கள் அண்டை நாடுகளில்தான் திட்டமிடப்படுகின்றன. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் கண்டிப்பாக அதற்கான விலையையும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தீவிரவாதத்தை பொருத்த வரையில் நல்லது, கெட்டது என்பதை பிரித்து பார்க்க முடியாது என்பதை பாகிஸ்தானும் அதன் நட்பு நாடுகளும் புரிந்து கொள்ல வேண்டும்
உலகிலேயே இந்தோனேஷியாவுக்கு அடுத்ததாக முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாடு இந்தியாதான். இந்திய முஸ்லீம்கள் தேசப்பற்றுடன் உள்ளதால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் அவர்களை ஈர்க்க முடியவில்லை.
இந்திய மண்ணில் பல ஆண்டுகளாக லஷ்கர் இ தொய்பா, ஜெய்ச் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் உதவியால் தீவிரவாத தாக்குதல்களை மறைமுகமாக நடத்தி வரும் பாகிஸ்தான், உடனடியாக இந்த தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.பயங்கரவாதிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் நாடுகளுக்கு எதிராக உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.