நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள். சர்ச்சை கருத்து தெரிவித்த வி.எச்.பி. தலைவருக்கு சம்மன்
நீதிமன்றத்தில் தீவிரவாதி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தீவிரவாதிகளே. அந்த வகையில் நாடாளுமன்றத்திலும் சில தீவிரவாதிகள் இருக்கின்றனர் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தத விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் சாத்வி பிராச்சி அவர்களுக்கு மாநிலங்களவை செயலகம் சம்மன் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது என ஒருசில நாடாளுமன்ற எம்.பி.க்கள், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தனர். ஆனால், ஜனாதிபதி அந்த மனுவை நிராகரித்ததால் யாகூப் மேமன் கடந்த மாதம் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிஅலியில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் சாத்வி பிராச்சி, “நாடாளுமன்றத்திலேயே ஒன்றிரண்டு தீவிரவாதிகள் இருக்கின்றனர். தீவிரவாதி என நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்த தீவிரவாதிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தீவிரவாதிகள்தான்”:என்று கூறியிருந்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை தீவிரவாதிகள் என்று சாத்வி பிராச்சி கூறியது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து மாநிலங்களவையில் சாத்வி பிராச்சிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதை ஏற்ற மாநிலங்களவை செயலகம் சாத்வி பிராச்சிக்கு நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. இந்த சம்மனுக்கு அவர் என்ன பதிலளிக்கின்றார் என்பதை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.