அரசுக்கு எதிராக ஐ.ஏ.எஸ் அதிகாரி பேட்டியளிக்க கூடாது. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம்

அரசுக்கு எதிராக ஐ.ஏ.எஸ் அதிகாரி பேட்டியளிக்க கூடாது. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம்

தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் நேற்று தனது வீட்டில் கொடுத்த பேட்டியின்போது மத்திய அரசையும் மாநில அரசையும் குற்றஞ்சாட்டினார். “புரட்சித் தலைவி அம்மாவால் நியமிக்கப்பட்டவன்” என்று அரசியலும் பேசியுள்ளார். இதை சக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே ரசிக்கவில்லை.

இதுகுறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் கூறியதாவது:

ராமமோகன ராவ் தலைமைச் செயலாளராக இருந்தபோது தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஊழலுக்கான ஆவணத்தை தேடியபோது தமிழகத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தினார். இப்போது, “புரட்சித் தலைவி அம்மாவால் நியமிக்கப்பட்டவன்” என்று சொல்லி ஐ.ஏ.எஸ். அதி காரிகளுக்கும், அகில இந்திய ஆட்சிப் பணிக்கும் தீராத அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்.

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசின் கொள்கைகளை விளக்கவோ, சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்தோ பேட்டி அளிக்கலாம். அதைவிடுத்து தனிப்பட்ட முறையிலோ, அரசுக்கு எதிராகவோ பேட்டி அளிக்கக்கூடாது என்று அகில இந்தியப் பணி நடத்தை விதிகளிலே கூறப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கூறியதாவது:

ஒவ்வொரு பதவிக்கும் நேர்மை, பாரபட்சமின்மை உள்ளது. இவற்றைப் பின்பற்றுவதாக இருந்தால், ராமமோகன ராவ் பேட்டி அளித்திருக்கக்கூடாது. அவர் வீட்டில், அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது எதுவும் கிடைக்கவில்லை என்றால், தன்னைத் துன்புறுத்தியதாகவோ, அத்துமீறியதாகவோ பேசலாம். ஆனால், இந்த சோதனையில் அதிகளவு பணம் எடுத்த பிறகு பேசுவதற்கு அவருக்குத் தகுதி யில்லை’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply