தமிழகத்தின் பால்தாக்கரே என்று இந்து முன்னணி தொண்டர்களால் அழைக்கப்படும் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா குறித்து தங்கள் எண்ணம் என்ன? என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராமகோபாலன் ” ‘‘கருணாநிதி இந்து விரோதி… ஜெயலலிதா இந்து துரோகி. இந்த எண்ணத்தில் எப்போதும் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.’’ என்று கூறியுள்ளார். மேலும் கருணாநிதியை ஒருமுறை நேரில் சந்தித்தபோது, அவர் தனக்கு கீதையின் மறுபக்கம்’ என்ற நூலை கொடுத்ததாகவும், ஆனால் அந்த நூலை தான் படிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
19 வயது முதல் சமுதாயப்பணியில் ஈடுபட்டதால் தான் திருமணத்தை பற்றி எண்ணிப்பார்க்கவில்லை என்றும், திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் தனக்கு வரவில்லை என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து கூறிய ராமகோபாலன், ‘ ‘‘அவரால் என்ன செய்ய முடியுமோ, அதைச் சிறப்பாகச் செய்கிறார். ரொம்ப அபூர்வமாக, புதிய புதிய கோணங்களில் சிந்தித்துச் செயல்படுகிறார். விவசாயிகள், பெண்கள் பற்றி எல்லாம் கவலைப்படுகிறார். இந்த இரண்டும் அவரது ஆட்சியைச் சிறப்பாக்கும்.’’ என்று கூறினார்.