ராமானுஜன். திரைவிமர்சனம்

ramanujan-movie-new-stills-7-620x330தற்போதுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட இளையதலைமுறையினர் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு காவிய திரைப்படம். இந்திய கணித மேதை ஒருவர் இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்டு பின் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் உலகிற்கு தெரிய ஆரம்பித்த கதையை மிகவும் நேர்த்தியோடு நகர்த்தியுள்ளார் இயக்குனர் ஞானசேகரன்.

பள்ளி வயது முதல் கணிதத்தில் புத்திசாலியாக இருக்கும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீநிவாச ராமானுஜன். இவர்  மெட்ரிகுலேசன் பள்ளியில் முதல் மாணவனாக இருந்ததால் கல்லூரி படிப்பு படிக்க இலவசமாக இடம் கிடைக்கின்றது.. ஆனால் ராமானுஜனின் கவனம் கணிதத்தில் மட்டுமே இருந்ததால் மற்ற பாடங்களில் கோட்டை விடுகிறார்.  இதனால் அவனை சுற்றியுள்ளவர்களால் அவமானப்படுத்தப்படுகிறான்.

அப்படியிருந்தும் ராமானுஜனுக்கு கணிதத்தில் உள்ள ஆர்வம் குறையவில்லை, கணிதத்தில் புதுப்புது கண்டுபிடிப்புகள் ராமானுஜரால் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. ஆனால் இந்த கணிதத்திறமை ஒருவருக்கும் புரியாததால் அவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ள அனைவரும் தயங்குகின்றனர். இதனால் வேலை வழியின்றி சென்னை செல்லும் ராமானுஜனுக்கு பாராட்டு மட்டுமே கிடைத்தது. ஆனால் வேலை கிடைக்கவில்லை.

சென்னையில் வேலையில்லாமல் இருக்கும் ராமானுஜருக்கு அவருடைய தாய் சுஹாசினி திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார். திருமணத்திற்கு பின்னர் நிலைமை சரியாகிவிடும் என்று அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறார் ராமானுஜம். ஜானகி என்ற பெண் ராமானுஜருக்கு மனைவியாகிறார்.

இந்நிலையில் ராமானுஜனுக்கு அவருடைய கல்லூரி ஆசிரியர் ஒருவர் உதவி செய்கிறார்.அவருடைய உதவியுடன் இங்கிலாந்துக்கு செல்கிறார் ராமானுஜர். இங்கிலாந்தின் கேம்பிர்ட்ஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகளை பாராட்டுவதோடு அவரது  கண்டுபிடிப்புகளுக்கு பெரும் உதவியும் செய்கிறார்.

இந்நிலையில் ராமானுஜனை டி.பி நோய் தாக்கி அது நாளடைவில் முற்றுகிறது. மனைவியையும் பிரிந்து இங்கிலாந்தில் இருக்கும் ராமானுஜன் டி.பி.நோயோடும் கஷ்டப்படுகிறார். இறுதியில் அவரது கண்டுபிடிப்புகள் என்ன ஆயிற்று? அவரது நோய் குணமானதா என்பதே முடிவு.

ராமானுஜம் கேரக்டரில் அபினய் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் ராமானுஜராகவே வாழ்ந்துள்ளார் என்றும் கூறலாம். மிகைபடுத்தாத அளவான நடிப்பு. கங்கிராட்ஸ் அபினய்

மேலும் பாமா, ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி , அப்பாஸ் ஆகியோர்களும் தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களை மிகச்சிறப்பாக செய்துள்ளனர். பாரதி, பெரியார், மோகமுள் வரிசையில் மற்றுமொரு தரமான படத்தை கொடுத்து மக்களின் மனதில் நிற்கிறார் இயக்குனர் ஞானராஜ சேகரன். கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய அற்புதமான படம்.

Leave a Reply