ராமானுஜர் கோவிலில், அவரது அவதார உற்சவம் நேற்று, வெகு சிறப்பாக நடைபெற்றது. சித்திரை திருவாதிரை நட்சத்திர நாளில் அவதரித்த ராமானுஜருக்கு, காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில், தனி கோவில் உள்ளது. இந்த கோவில், வரதராஜ பெருமாள் கோவில் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இவரது, 998ம் ஆண்டு அவதார உற்சவம் நேற்று, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நேற்று காலை கோவில் உட்புற வளாகத்தில், ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனமும்; சிறப்பு அலங்காரமும், ஆராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், ராமானுஜரை வழிபட்டனர். பகல் 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு பிரசாதமும். அன்னதானமும் வழங்கப்பட்டது. மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் மகாமண்டபத்தில், ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, மகா மண்டபத்தில் எழுந்தருளிய ராமானுஜருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, சாற்றுமறையுடன் வழிபாடு நடந்தது