காவிரி பிரச்சனையில் கடிதம் எழுதுவது மட்டும்தான் முதல்வரின் கடமையா? ராமதாஸ்
கர்நாடக மாநில மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே காவிரி போதுமான தண்ணீர் இல்லாததால், தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் அறிவிப்பு இருப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று விடுத்த தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:
” சம்பா சாகுபடிக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மதிக்காமலும், இரு மாநில மக்களிடையே நிலவும் நல்லுறவை குலைக்கும் வகையிலும் அவர் இவ்வாறு பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதம் 10 டி.எம்.சி, ஜூலை மாதம் 34 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதம் 50 டி.எம்.சி என கடந்த 31 ஆம் தேதி வரை 94 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டிருக்க வேண்டும். செப்டம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு 1.3 டி.எம்.சி. வீதம் இன்று வரை 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 67 டி.எம்.சி. மட்டுமே காவிரியில் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால், இன்று வரை தமிழகத்திற்கு 37 டி.எம்.சி. பற்றாக்குறை உள்ளது. செப்டம்பர் மாதத்தில் 40 டி.எம்.சியும், அக்டோபர் மாதத்தில் 22 டி.எம்.சியும் தண்ணீர் திறக்க வேண்டும். இந்த அளவு தண்ணீரை திறந்து விட்டால் தான் ஒருபோக சம்பா சாகுபடியாவது சாத்தியம் ஆகும். ஆனால், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பே தென்படவில்லை.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாததற்காக கர்நாடக முதலமைச்சர் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. கர்நாடகத்தில் மழை பெய்து அணைகள் நிரம்பினால் மட்டுமே காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் என்று சித்தராமய்யா கூறியிருப்பது அகம்பாவத்தின் அடையாளம் ஆகும். அதாவது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்க முடியாது; தமிழகத்தை வடிகாலாக மட்டுமே பயன்படுத்துவோம் என்பதைத் தான் சித்தராமய்யா வேறு வார்த்தைகளில் கூறியிருகிறார். கர்நாடகத்தில் இந்த ஆண்டு இயல்பான மழை பெய்யவில்லை என்பதும், சுமார் 20% பற்றாக்குறை மழை என்பதும் உண்மைதான். ஆனால், கர்நாடக காவிரி படுகை பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விட்ட பிறகும், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் நேற்றைய நிலவரப்படி 74.23 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. போதிய அளவு மழை பெய்யாத காலங்களில் நடுவர் மன்றம் வகுத்துத் தந்த இடர்ப்பாட்டுக்கால நீர்ப்பகிர்வு முறைப்படி இருக்கும் நீரை பகிர்ந்து கொள்வது தான் சட்டப்படி சரியான அணுகுமுறையாகும்.
மாறாக, கர்நாடக அணைகளில் தேவைக்கு அதிகமாக நீரை வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு தர மறுப்பதை மன்னிக்க முடியாது. கடந்த காலங்களில் கடைபிடித்து வந்த தமிழர் விரோத போக்கையே கர்நாடகம் தொடர்ந்து கடைபிடிக்கிறது; காவிரி பிரச்சினையில் கர்நாடகம் இன்னும் திருந்தவில்லை என்பதற்கு சித்தராமய்யாவின் பேச்சு உதாரணம். காவிரிப் பிரச்சினை இந்த அளவுக்கு தீவிரம் அடைந்ததற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் தான் காரணம். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்பட்ட நிலையில், அதை அப்போதே மத்திய அரசிதழில் வெளியிட்டு தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருந்தால் சிக்கல் தீர்ந்திருக்கும்.
ஆனால், கர்நாடக அரசியல் லாபத்திற்காக 6 ஆண்டுகள் தாமதப்படுத்தி, உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகு தான் 2013 ஆம் ஆண்டில் நடுவர் மன்றத் தீர்ப்பை முந்தைய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனாலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அதன்பின் பதவியில் இருந்த 15 மாதங்களில் அமைக்க வில்லை. பின்னர் பதவியேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் உமாபாரதி, கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்பின் 15 மாதங்களாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை. கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் நெருக்கடிக்கு பணிந்து மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவை அரசு கிடப்பில் போட்டிருக்கிறது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு அணுகுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும். கர்நாடக முதல்வருடன் பேசி காவிரியில் தண்ணீர் திறக்குமாறு ஆணையிடுவதுடன், மேலாண்மை வாரியத்தையும் அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், காவிரி பிரச்சினையில் பிரதமருக்கு கடிதம் எழுதுவது மட்டுமே கடமை என்ற அணுகுமுறையை தமிழக முதலமைச்சர் மாற்றிக் கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதில் எடுக்கப்படும் முடிவை பிரதமரிடம் தெரிவிப்பது உள்ளிட்ட அரசியல் ரீதியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.