முதல்வரை இழிவுபடுத்தியதற்காக ராஜபக்சே மன்னிப்பு கேட்கவேண்டும். ராமதாஸ்

ramdossகீழ்த்தரமான ரசனையுடன் முதல்வரை இழிவாக விமர்சனம் செய்து இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே மன்னிப்பு கேட்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

இலங்கை அரசின் அதிகாரபூர்வ இணையதளமான இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை இணையதளம்,  தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதும் கடிதங்கள் குறித்து பெண் என்றும் பாராமல் முதல்வரை அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளது. இது பெரும் கண்டனத்துக்குரியது.

முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதா கடிதம் எழுதுவதை இலங்கையில் உள்ள செய்தி இணையதளங்கள் விமர்சித்தால் கூட அதை கருத்து சுதந்திரம் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  ஆனால், இலங்கை அரசுத்துறை இணையத்தளத்தில், அதிலும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டு பாதுகாப்புத்துறையின் இணையதளத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்டை நாட்டின் முதலமைச்சரின் செயல்பாட்டை விமர்சித்து கண்ணியமற்ற மொழியில் கட்டுரை எழுதப்படுவது சரியா? இது இந்திய இறையாண்மையில் குறுக்கிடும் செயல் ஆகாதா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்

இலங்கை இணையதளக் கட்டுரையின் தலைப்பு தமிழக முதலமைச்சரை மட்டுமின்றி, பிரதமரையும் இழிவுபடுத்துவதைப் போல அமைந்திருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இத்தகைய கட்டுரைகளை வெளியிடும் அளவுக்கு இலங்கை அரசுக்கு துணிச்சலைத் தந்திருக்கிறது. இலங்கையின் இத்தகைய தரம் தாழ்ந்த, நச்சுத்தன்மைக் கொண்ட, அருவருக்கத்தக்க போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது. இதற்காக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை  இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்; இக்கட்டுரைக்காக இலங்கை அதிபரும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும் மன்னிப்பு கேட்கும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். மன்னிப்பு கேட்க இலங்கை அரசு மறுத்தால் அந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொள்ளவும் இந்திய அரசுத் தயங்கக்கூடாது/

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply