தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகுழியில் புதைக்கப்பட்டு விட்டது. ஜெயநாயகம் தழைத்தோங்குகிறது என்பது மட்டும் உண்மை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்ன நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்களோ அதுவே நடந்திருக்கிறது… ஜெயலலிதா ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது எதிர்பார்த்தபடியே நடந்த ஒன்று என்றால், அங்கு ஆளுங்கட்சியினரால் அரங்கேற்றப்பட்ட தேர்தல் முறைகேடுகளோ எதிர்பார்க்கப்பட்டதைவிட பல மடங்கு அதிகம் ஆகும்.
ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் என்பதே ஜெயலலிதாவுக்காக திணிக்கப்பட்ட ஒன்றாகும். ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பாகவே அவருக்காக ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி காலி செய்யப்பட்டு, அவர் பதவியேற்ற 3 நாளிலேயே இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் அவருக்கு ஆதரவாக அரசு எந்திரங்கள் மட்டுமின்றி, அரசியல் சாசன அமைப்புகளும் செயல்பட்டன.
வாக்குப்பதிவு நாளன்று 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை ஆளுங்கட்சியினர் கைப்பற்றி, அந்த வாக்குச் சாவடியில் உள்ள வாக்குகளை விட அதிகமாக வாக்குகள் பதிவாகும் அளவுக்கு கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த அளவுக்கு முறைகேடுகள் செய்யப்பட்ட நிலையில், ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கூட ஜெயலலிதா வெற்றி பெறவில்லை என்றால் ஆளுங்கட்சியினர் அரங்கேற்றிய முறைகேடுகளுக்கும், மோசடிகளுக்கும் மதிப்பில்லாமல் போயிருக்கும்.
தேர்தலுக்குப் பிறகும் அரசியல் சட்ட அமைப்புகள் செயல்படும் விதம் தான் வேதனையளிக்கிறது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்குவதற்கு முன்பாகவே, சட்டப்பேரவை உறுப்பினராக ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.
இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கலாம்; அவர் வெற்றி பெற்றதாக எண்ணி அதிமுகவினர் கொண்டாடலாம். ஆனால், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர், அதற்கான சான்றிதழை தாக்கல் செய்த பிறகு தான் பதவியேற்புக்கான ஏற்பாடுகளை சட்டப்பேரவைத் தலைவரும் சட்டப்பேரவைச் செயலாளரும் தொடங்க வேண்டும். ஆனால், இதைப்பற்றி கவலைப்படாமல் பதவியேற்புக்கான ஏற்பாடுகளை சட்டப்பேரவைத் தலைவரே மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகும்.
மற்றொரு பக்கம் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே தமிழக அரசின் இணையதளத்தில் ஜெயலலிதாவை சட்டமன்ற உறுப்பினர் என்று பதிவு செய்து ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மகிழ்ச்சியடைகிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகுழியில் புதைக்கப்பட்டு விட்டது… ஜெயநாயகம் தழைத்தோங்குகிறது என்பது மட்டும் உண்மை” என்று ராமதாஸ் கூறியுள்ளார்