ஜெயலலிதாவின் ஆட்சிக்கு ‘நைட் வாட்ச்மேன்’ ஆட்சி எவ்வளவோ மேல்’ ராமதாஸ்
தினந்தோறும் அறிக்கைகள் விட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாமக தலைவர் ராமதாஸ் நேற்று விடுத்த அறிக்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக தாக்கி அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய அறிக்கையில் ஜெயலலிதாவின் ஆட்சியை விட பன்னீர்செல்வம் ஆட்சி எவ்வளவோ மேல் என்றும் கூறியுள்ளார்.
பாமக ராமதாஸ் அவர்களின் விடுத்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
”தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்தாவது முறை ஜெயலலிதா பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படாத அரசு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகி விட்டால் இப்போது ஆமை வேகத்தில் நடக்கும் அரசு நிர்வாகம் இனி குதிரை வேகத்தில் ஓடும் என்றெல்லாம் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஆனால், குதிரைக்கு ஆமையே பரவாயில்லை எனும் அளவுக்கு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கிவிட்டது.
ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா மட்டும் தான் தேசிய கீதத்தைக் கூட இசைக்க நேரமில்லாத அளவுக்கு விரைவாக நடைபெற்று முடிந்ததே தவிர, அதன்பின் அரசு நிர்வாகத்தில் எந்த அசைவும் காணப்படவில்லை. புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் முடிவடையும் நிலையில் இதுவரை ஒருமுறை கூட அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவில்லை. ஒரு புதிய திட்டம் கூட அறிவிக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதத்தில் 7 நாட்கள் மட்டுமே முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்துக்கு வந்திருக்கிறார். தலைமைச் செயலகத்துக்கு வருவது, வந்த வேகத்தில் சில திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்த பின் ஒரு மணி நேரத்தில் இல்லம் திரும்புவது ஆகியவற்றைத் தான் முதலமைச்சர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மக்களின் நலனுக்காக தினமும் 20 மணி நேரம் உழைப்பதாக வார்த்தைக்கு வார்த்தை கூறிக்கொள்ளும் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்தில் மக்கள் பணிக்கு செலவிட்டது 10 மணி நேரத்திற்கும் குறைவு என்பதை மறுக்க முடியுமா?
பொதுவாக அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு 7 நாட்கள் விடுமுறையும், 23 நாட்கள் பணியும் வழங்கப்படும். ஆனால், தமிழகத்தின் முதல் அரசு ஊழியரான ஜெயலலிதா மாதத்தில் 23 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு 7 நாட்கள் அதுவும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் மக்கள் பணியாற்றுகிறார். இப்படி ஒரு முதலமைச்சரை பெற்றதற்கு தமிழக மக்கள் என்ன தவம் செய்தனரோ?
ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டதும், அவரது இடத்தில் பொம்மை முதலமைச்சர் ஒருவர் அமரவைக்கப்பட்டார். மட்டைப் பந்து போட்டிகளில் ‘நைட் வாட்ச்மேனாக’ கடைநிலை வீரர் அனுப்பி வைக்கப்படுவதைப் போல முதல்வராக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எதுவும் செய்யவில்லை; செய்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு 8 மாதங்களாக முடங்கிக் கிடந்த அரசு நிர்வாகத்தை சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கே முதலமைச்சரும், அதிகாரிகளும் பல மாதங்கள் இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்லும் முதல்வரால் அரசு நிர்வாகத்தில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும்? எனத் தெரியவில்லை. எட்டு மாதங்களாக முடங்கிக் கிடந்த நிர்வாகம், கடந்த ஒரு மாதத்தில் மேலும் சுருண்டு கிடக்கிறதே தவிர செயல்படத் தொடங்கியதாகத் தெரியவில்லை.
ஆனால், பசுவிடம் பால் கறக்க வைக்கோலில் செய்யப்பட்ட கன்றுக்குட்டியைக் காட்டி ஏமாற்றுவதைப் போல, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா நாள்தோறும் ஒரு திட்டத்தைத் தொடங்கி வைப்பதைப் போல செய்திக் குறிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா தலைமைச் செயலகத்திற்கு வரும்போது மொத்தமாக 4 திட்டங்களைத் தொடங்கி வைத்தால், அதை ஒவ்வொரு நாளும் ஒரு திட்டத்தை அவர் தொடங்கி வைத்தது போன்று செய்திக் குறிப்புகளை அனுப்பி செயல்படாத அரசை செயல்படுவது போல காட்ட முயற்சிகள் செய்யப்படுகின்றன. மொத்தத்தில் விளம்பரத்திலும், செய்திக்குறிப்பிலும் தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் 17 துறைகளின் சார்பில் ரூ.6,432 கோடியே 67,79,000 மதிப்புள்ள திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். இவை அனைத்தும் ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் செயல்படுத்தப்பட்டவையா என்றால்… இல்லை என்பது தான் சரியான பதில். பல மாதங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்ட இந்தத் திட்டங்களை தாம் மீண்டும் முதலமைச்சரான பிறகு தான் தொடங்கி வைக்க வேண்டும் என்ற தாராள மனதுடன் முடக்கி வைத்த பெருந்தன்மையாளர் தான் ஜெயலலிதா. அரசுத் திட்டங்கள் முடக்கி வைக்கப்படுவதால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் கவலையில்லை; தமக்கான விளம்பரம் தான் முக்கியம் என்ற எண்ணம் கொண்ட ஜெயலலிதா, ஏதோ மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தாம் அவதாரம் எடுத்தது போன்று நடத்திய நாடகங்கள் அம்பலமாகிவிட்டன.
அரசு நிர்வாகம் முடங்கிக் கிடந்தாலும் லஞ்சமும், ஊழலும் அவற்றுக்கான பேரங்களும் மட்டும் ஓயவில்லை. தமிழகத்தில் இன்னும் பல மாதங்கள் கழித்து செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்களுக்கு கூட இப்போதே வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் தான் நிரப்பப்படும் என வெளிப்படையாக அரசு அறிவித்துள்ள நிலையில், ரூ.6 லட்சம் தந்தால் அப்பணியை வாங்கித் தருவதாக ஆளுங்கட்சியினர் பேரம் பேசுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இன்னும் சில மாதங்களே ஆட்சியில் நீடிக்க முடியும் என்பதால் அதற்குள் கிடைத்ததை எல்லாம் சுருட்டிக் கொள்ள வேண்டும் என்ற வேகம் மட்டுமே ஆட்சியாளர்களிடம் காணப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்ற போது இதைவிட மோசமான ஆட்சியை யாராலும் தர முடியாது என்பது தான் அனைவரின் எண்ணமுமாக இருந்தது. ஆனால், இப்போது மணிக்கணக்கிலும், நிமிடக்கணக்கிலும் ஜெயலலிதா மக்கள் பணியாற்றுவதைப் பார்க்கும்போது பன்னீர்செல்வம் ஆட்சியே பரவாயில்லை என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான ஒரு மாத ஆட்சியின் சாதனை என்பது இது தான்” எனக் கூறியுள்ளார்.