கருணாநிதி செய்த பாவங்களுக்கு பரிகாரமே இல்லை. ராமதாஸ்

ramadoss and karu(1)தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்து இருக்கிறார். அதை, தமிழக மக்கள் நம்பி ஏமாறமாட்டார்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறார். தமது அறிக்கையின் முதல் பகுதியில் அனைத்துத் தரப்பினரும் மனம் போன போக்கில் மது அருந்தி நூற்றுக்கணக்கில் உயிர்ப் பலி ஆவதாகவும், பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் மதுவுக்கு பலி ஆவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கலைஞரின் அறிக்கையை படிக்கும்போது, அதன் ஒவ்வொரு வரியும் பாவ மன்னிப்பு கோருபவரின் மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவே என காதில் விழுந்தன. காரணம், 1948 ஆம் ஆண்டிலிருந்து 23 ஆன்டுகளாக தமிழகத்தில் நடைமுறையிலிருந்த முழு மதுவிலக்கை 1971 ஆம் ஆண்டு கலைஞர் ரத்து செய்தது தான் தமிழகத்தின் இன்றைய அவல நிலைக்கு காரணமாகும். மதுவிலக்கின் தேவை குறித்து கலைஞர் இப்போது பேசும்போது, 1971 ஆம் ஆண்டில் மதுவிலக்கை ரத்து செய்ய கலைஞர்  முடிவு செய்தது, அதையறிந்து துடித்து போன மூதறிஞர் இராஜாஜி கொட்டும் மழையில் குடைபிடித்து வந்து கலைஞரை சந்தித்து மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியது, ஆனால் அதை ஏற்காத கலைஞர், ”இராஜாஜி ஒரு பரிந்துரைக்காகத் தான் என்னை சந்தித்தார்” என்று கூறி அவரை எள்ளி நகையாடிவிட்டு மதுவிலக்கை ரத்து செய்தது உள்ளிட்டவை என் நினைவுக்கு வந்து செல்கின்றன. மது என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு தலைமுறை வளர்ந்த நிலையில், அவர்களை மதுவலையில் வீழ்த்தி சிதைத்த பாவம் கலைஞரையே சாரும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

மதுவின் தீமைகள் குறித்தும், மது விலக்கின் அவசியம் குறித்தும் 35 ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 26 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் அதன் முதன்மைக் கொள்கையாக இருப்பது மது விலக்கு தான். அதனால் தான் பா.ம.க. ஆட்சிக்கு வந்த பின்னர் முதலமைச்சர் அன்புமணி ராமதாஸ் போடும் முதல் கையெழுத்து முழுமையான மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவதற்காகத் தான் இருக்கும் என்று அறிவித்திருக்கிறோம். பா.ம.க. சார்பில் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வரும் மது ஒழிப்பு மாநாடுகளுக்கு ஆயிரக்கணக்கில் மகளிர் திரண்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் பார்த்த பின்னர் மதுவிலக்கு பற்றி பேசுவது பலருக்கும் பொழுதுபோக்காக மாறி விட்டது. அந்த வரிசையில் கலைஞரும் சேர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. அதுமட்டுமின்றி, முழு மதுவிலக்கை உடனடியாக கொண்டுவருவாரா? அல்லது படிப்படியாக மதுவிலக்கு என்று கூறி கடந்த காலத்தில் ஏமாற்றியதைப் போல இப்போதும் ஏமாற்றுவாரா? என்பது பற்றியெல்லாம் எதையும் கூறாமல், பின்னாளில் மாற்றிக்கொள்ள வசதியாக மதுவிலக்கை அமல் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்டும் படாமலும் மேலோட்டமாக ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் கலைஞர்.

1971 ஆம் ஆண்டில் மதுக்கடைகளை திறந்து தமிழகத்தின் சீரழிவுக்கு வழிவகுத்த கலைஞருக்கு 44 ஆண்டுகள் கழித்து இப்போது தான் மதுவின் தீமைகள் குறித்து ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் எதனால் ஏற்பட்டிருக்கிறது? அடுத்த 8 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் மக்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக இந்த ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில், கலைஞர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது மதுவிலக்கை நடைமுறைப் படுத்தும்படி வலியுறுத்தினேன். அப்போதெல்லாம் பதிலாக கிடைத்தது கிண்டலும், கேலியும் தான். 22.12.2008 அன்று 44 சமுதாயத் தலைவர்கள் மற்றும் மத குருமார்களுடன் கலைஞரைக் கோட்டையில் சந்தித்து தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என மன்றாடினேன். ஆனால், எனது கோரிக்கையை முழுமையாக ஏற்காத கலைஞர், மது விற்பனை ஒரு மணி நேரம் குறைக்கப்படும்; இனி புதிதாக மதுக்கடைகள் எதுவும் திறக்கப்படாது; படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார். கலைஞர் நினைத்திருந்தால் அதற்கு பிந்தைய இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் மதுவிலக்கை கொண்டுவர கலைஞர் துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

மாறாக, சசிகலா உறவினர்களால் நடத்தப்படும் கோல்டன் மிடாஸ் தவிர 30 ஆண்டுகளில் புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்ற நிலையில், அதை உடைத்து தி.மு.க.வைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள் கலைஞர் கதை வசனத்தில் உளியின் ஓசை திரைப்படம் தயாரித்தவர், கலைஞர் தொலைக்காட்சி தொடங்க உதவி செய்தவர் உள்ளிட்ட 5 பேருக்கு புதிய மது ஆலைகளை அமைக்க அனுமதி அளித்து அடுத்த பாவத்தையும் செய்தவர் தான் கலைஞர். ஆனாலும் நான் சளைக்காமல் மது விலக்கை நடைமுறைப்படுத்தும்படி வலியுறுத்தி வந்தேன். இது குறித்து 29.07.2010 அன்று கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில், ‘‘டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே?’’ என்று கேள்வி எழுப்பி, ‘‘டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை மாத்திரமல்ல-மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று ராமதாஸ் வலியுறுத்தி வருகின்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அது பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்’’ என்று கலைஞர் பதில் அளித்திருந்தார்.

அதன்பின் 08.08.2010 அன்று டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை குறித்த வினாவுக்கு பதிலளிக்கும் போதும் விரைவில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால், 24.08.10 அன்று செய்தியாளர்களிடம் பேசிய கலைஞரிடம் மதுவிலக்கு பற்றி கேட்டபோது, ‘‘மதுவிலக்கு குறித்து பரிசீலித்து வருவதாகத்தானே சொன்னேன், இத்தனை நாள்களில் கொண்டு வருகிறேன் என்றா கூறினேன்?’’ என எதிர்கேள்வி எழுப்பி நழுவி விட்டார். மதுவுக்கு ஆதரவாக இப்படிப்பட்ட நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கலைஞர் தான், ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக கூறுகிறார். நம்ப முடியாத வாக்குறுதிகளை தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்து என்பார்கள். ஆனால், கலைஞரின் வாக்குறுதிகள் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள். 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளிடம் ஏமாந்த மக்கள் இனியும் கலைஞரை நம்பி ஏமாறமாட்டார்கள்.

மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதில் கலைஞருக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், தி.மு.க.வினராலும், தி.மு.க. ஆதரவு தொழிலதிபர்களாலும் நடத்தப்படும் மது ஆலைகளை மூடிவிட்டு மதுவிலக்கு குறித்து வாக்குறுதி அளிக்கட்டும். அப்போது கூட மக்கள் நம்புவார்களா என்பது ஐயமே. ஒருவேளை உண்மையாகவே தாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்ய கலைஞர் விரும்பினாலும் கூட அதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர் செய்த பாவம் அவ்வளவு கொடியது” என்று கூறி உள்ளார்.

Leave a Reply