மதன் கைதுக்கு முன்பு பேரம் நடந்ததா? டாக்டர் ராம்தாஸ் எழுப்பும் அதிர்ச்சி சந்தேகங்கள்
வேந்தர் மூவிஸ் மதன் நேற்று திருப்பூரில் கைது செய்யப்பட்டது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பலவிதமான சந்தேகங்களை அறிக்கை ஒன்றின் மூலம் எழுப்பியுள்ளார். இந்த சந்தேகங்களுக்கு காவல்துறையினர்களிடம் இருந்து விளக்கம் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவருடைய நீண்ட அறிக்கை இதோ:
சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த வேந்தர் மூவீஸ் மதனை சென்னை காவல்துறை கைது செய்திருக்கிறது. காவல்துறையினரின் கைது நடவடிக்கை தாமதிக்கப்பட்டது தான் என்றாலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அவசியமான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
ஆனால், மதன் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் ஏராளமான மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. மதன் எங்கு, எப்போது, எந்த வகையில் கைது செய்யப்பட்டார் என்பது குறித்த துல்லியமான விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. காவல்துறையினர் வெளியிட்ட விவரங்கள் நம்பும்படியாகவும் இல்லை. மதன் முதலில் மணிப்பூரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையை மேற்கோள்காட்டி, ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், மதன் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பூரில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 41(பி) பிரிவின்படி ஒருவரை கைது செய்யும்போது முதல் நடவடிக்கையாக கைது அறிக்கை (Memorandum Of Arrest) தயாரிக்கப்படவேண்டும்; அதில் கைது செய்யப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரோ, கைது செய்யப்படும் இடத்தைச் சேர்ந்த மதிக்கத்தக்க நபரோ சாட்சியாக சான்றொப்பம் அளிக்க வேண்டும்; அதை உறுதி செய்து கைது செய்யப்பட்டவர் கையெழுத்திட வேண்டும். ஆனால், இந்த நடைமுறை மதன் விஷயத்தில் கடைபிடிக்கப்ப்படவில்லை.
அதேபோல், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 56ஆவது பிரிவின்படி, ஒருவரை கைது செய்தவுடன், தாமதம் செய்யாமல் அப்பகுதி நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று நீதிபதி முன்போ அல்லது அப்பகுதி காவல்நிலைய அதிகாரி முன்போ நேர்நிறுத்தப்பட வேண்டும். ஆனால், அதையும் சென்னை மாநகரக் காவல்துறையினர் செய்யவில்லை. குற்றவழக்குகளில் ஒருவர் கைது செய்யப்படும் போது, அதுகுறித்து அவரின் நெருங்கிய உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அதன்படி, மதன் கைது செய்யப்பட்டது குறித்து, அவரை கண்டுபிடிக்கக்கோரி வழக்குத் தொடர்ந்த அவரது தாயாரிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதையும் சென்னை மாநகரக் காவல்துறை செய்யவில்லை.
மதன் அவரது கூட்டாளிகளுடன் உத்தர்காண்ட், மணிப்பூர், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பதுங்கி இருந்ததாகவும், அந்த மாநிலங்களில் மதன் சொத்துக்களை வாங்கிக்குவிக்க அவர்கள் உதவியதாகவும், அவர்களை கண்காணித்ததன் தொடர்ச்சியாகத் தான் மதன் திருப்பூர் வரும் தகவல் அறிந்து அவரை கைது செய்ததாகவும் சென்னை காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதன் கைது செய்யப்பட்டது பண மோசடி தொடர்பான வழக்காகும். மோசடி செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு மதன் சொத்து வாங்கியது உண்மை என்றால், அதற்கு உதவி செய்தோரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர்களை கைது செய்யாதது ஏன்?
மதன் எங்கு, எப்போது, யாரால், எப்படி கைது செய்யப்பட்டார் என்ற விவரம் கைது நடவடிக்கை முடிவடைந்த உடன் அறிவிக்கப்பட வேண்டும். அதுவும் செய்யப்படவில்லை. அதுகுறித்த விவரங்கள் காவல்துறையின் செய்திக்குறிப்பிலும் இடம்பெறவில்லை. மதன் கைது செய்யப்பட்ட வழக்கும், அவர் சிலருடன் சேர்ந்து செய்ததாக கூறப்படும் மோசடியும் சாதாரணமான ஒன்றல்ல. எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்புக்கும், மருத்துவ மேற்படிப்புக்கும் இடம் வாங்கித் தருவதாகக் கூறி 123 பேரிடம் ரூ.84.27 கோடியை மதன் மோசடி செய்திருக்கிறார். அந்த பணத்தை பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாகவும் மதன் கூறியிருக்கிறார். மதன் மாயமாகி 6 மாதங்களாகி விட்ட நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, மதனை பச்சமுத்து தான் கடத்திச்சென்று எங்கோ சிறை வைத்திருக்கிறார் என மதனின் தாயாரும், மனைவியும் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதற்கு போட்டியாக, மதன் மாயமானது குறித்து அவரது இரு மனைவிகள் மற்றும் தாயாரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பச்சமுத்துவின் மகன் ரவி பச்சமுத்துவும் உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இவற்றில் எது உண்மை? எது பொய்? இரண்டுமே பொய்யா? என்பதையெல்லாம் அறிய, மதன் கைது குறித்த அனைத்து விவரங்களையும் துல்லியமாக வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் மூலம் யாருடைய நலனையோ பாதுகாக்க காவல்துறை முயல்கிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது.
மதனின் கைது குறித்த எந்த தகவலையும் காவல்துறை உடனடியாக வெளியிடவில்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது மதன் சில நாட்களுக்கு முன்பே ஏன் கைது செய்யப்பட்டிருக்கக்கூடாது என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அவ்வாறு முன்பே கைது செய்யப்பட்டிருந்தால், இடைப்பட்ட காலத்தில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரை காப்பாற்றுவதற்கான பேரம் நடந்திருக்கலாம் என்ற சாத்தியமான யூகத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. சுருக்கமாக கூற வேண்டுமானால் மதன் மாயமானதில் தொடங்கிய மர்மம் அவரது கைதுக்கு பிறகும் நீடிக்கிறது. இந்த மர்மங்களை களைவதற்கான விளக்கத்தை காவல்துறை தான் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த விஷயத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது படிந்துள்ள சந்தேகத்தின் நிழலை அகற்ற முடியாது.