நடப்புக் கல்வியாண்டில் மருத்துவக் கல்வி பயிலும் தகுதி இருந்தும் வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது. அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தமுள்ள 2,257 இடங்களும் நிரப்பப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகளில் தமிழக அரசு கடைபிடித்த தவறான அணுகுமுறை காரணமாக நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் சேர வேண்டிய 544 மாணவர்கள் அந்த வாய்ப்பை இழந்து விட்டனர்.
நடப்பாண்டிற்கான 12&ஆம் வகுப்புத் தேர்வில் அறிவியல் பாடங்களின் வினாத்தாள்கள் கடினமாக இருந்ததால் மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் குறைந்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு கடந்த ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர இயலாத, ஆனால், நடப்பாண்டில் மருத்துவப்படிப்பில் சேரும் அளவுக்கு தகுதி மதிப்பெண் கொண்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்தனர். அவர்களில் 544 பேருக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. இதைத் தடுக்க வேண்டும் என்பதால் தான் நடப்பாண்டிற்கான மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கல்ந்தாய்வில் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். ஆனால், தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று அந்த வழக்கை தள்ளுபடி செய்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழக அரசு வகுத்துள்ள விதிகளின்படி பார்த்தால், பழைய மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது தான். ஆனால், நியாயப்படி பார்த்தால் பழைய மாணவர்கள் நடப்பாண்டின் கலந்தாய்வில் பங்கேற்பது தவறாகும். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விதிகளை தமிழக அரசு தெளிவில்லாமல் வகுத்திருப்பது தான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். தமிழக அரசு விதிகளின்படி, மருத்துவப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அந்த கல்வியாண்டின் திசம்பர் மாதத்தில் 17 வயதை நிறைவடைந்திருக்க வேண்டும்& 12 ஆம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால், முந்தைய ஆண்டுகளில் 12 ஆம் வகுப்புத் தேர்வில் மருத்துவக் கல்லூரியில் சேரும் அளவுக்கு தகுதி மதிப்பெண் பெறாதவர்கள் கூட, தகுதி மதிப்பெண் குறைவாக உள்ள ஆண்டில் மருத்துவப்படிப்பில் சேர முடியும் என்ற சூழல் நிலவுகிறது.
மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையில் குழப்பங்களைத் தவிர்க்க இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவது தான் உண்மையான சமூக நீதியாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதிப்பெண்களை உயர்த்திக் கொள்வதற்கான தேர்வு(Improvement Exam) ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்கள் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்று அடுத்த ஆண்டில் வரும் மாணவர்களின் வாய்ப்பைக் கெடுப்பார்கள் என்ற அடிப்படையிலேயேஅத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கான காரணங்கள் அனைத்தும் இந்த முறைக்கும் முழுதாக பொருந்தும்.
கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அதனால், கடந்த ஆண்டில் இயற்பியலில் 2710 பேரும், வேதியியலில் 1693 பேரும், உயிரியலில் 652 பேரும் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். நடப்பாண்டில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் மிகவும் கடினமாக இருந்தன. இதனால் இயற்பியலில் 124 பேரும், வேதியியலில் 1049 பேரும், உயிரியலில் 75 பேரும் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவ்வாறு இருக்கும்போது கடந்த ஆண்டு படித்தவர்கள் கடந்த ஆண்டு மாணவர்களுடனும், இந்த ஆண்டு படித்தவர்கள் இந்த ஆண்டு மாணவர்களுடனும் போட்டியிடுவது மட்டுமே சரியானதாக இருக்கும். கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோரில் 60 பேருக்கு 17 வயது நிறைவடையாததால் கடந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப் படவில்லை. அவர்களுக்கு மட்டும் நடப்பாண்டு கலந்தாய்வில் வாய்ப்பளிப்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.
நடப்பாண்டில் கலந்தாய்வு முடிவடைந்து விட்ட நிலையில், அதில் மாற்றங்களைச் செய்வது சரியாக இருக்காது. ஆனால், அடுத்த ஆண்டு முதல் இத்தகைய குளறுபடிகள் நடக்காத வகையில் விதிகளில் திருத்தங்களைச் செய்ய வேண்டும். அதேநேரத்தில் நடப்பாண்டில் பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட புதிய மாணவர்கள் 544 பேருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டதாகக் கூறி சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களுக்காக 19% கூடுதல் இடங்களை உருவாக்கி வழங்க தமிழக அரசுக்கு ஆணையிட்டது. கடந்த 14 ஆண்டுகளாக இந்த சலுகை வழங்கப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டில் தகுதியுள்ள மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் இடங்களை உருவாக்கித்தர மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.