கல்வி பயில வந்த மாணவர்களை பணம் காய்க்கும் மரங்கள் போல் கருதும் பல்கலைக் கழகங்கள் தங்கள் எண்ணத்தை கைவிட வேண்டும் என்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு போட்டியாக அரசு பல்கலைக்கழகங்களும் கட்டணத்தை உயர்த்தி வருவது வேதனை அளிப்பதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “கல்விக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் தனியார் பல்கலைக்கழகங்களுடன் அரசு பல்கலைக்கழகங்கள் போட்டியிட்டால் அது பயனளிப்பதாகவும், பெருமை தருவதாகவும் அமையும். ஆனால், கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதில் தனியார் பல்கலைக்கழகங்களுடன் அரசு பல்கலைக்கழகங்கள் போட்டியிடுவது வேதனையளிப்பதாகவும், அவமானம் தருவதாகவும் தான் உள்ளது.
வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் 98 கலை அறிவியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம், தேர்வுக்கட்டணம் ஆகியவை அதிகமாக வசூலிக்கப்படும் போதிலும், அரசு பல்கலைக்கழகங்களில் ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்வுக்கான கட்டணத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சுமார் 100 சதவீதம் உயர்த்தியது. பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஒரு தாளுக்கு ரூ.45 ஆக இருந்த தேர்வுக் கட்டணம் ரூ.85 ஆக உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், அந்த போராட்டங்களை நிர்வாகம் மதிக்காததால், அனைத்து மாணவர்களும் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை செலுத்திவிட்டனர். அதன்பின்னர் தேர்வுக்கட்டணத்தை ரூ.68 ஆக குறைத்த பல்கலைக் கழக நிர்வாகம், மாணவர்கள் கூடுதலாக செலுத்திய கட்டணத்தை திருப்பித் தர முடியாது என்றும், வேண்டுமானால் அடுத்த தேர்வுக்கான கட்டணத்தில் இதை கழித்துக் கொள்ளலாம் என்று கூறியது.
அதன்படி, வரும் ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்கான கட்டணத்தில், நிர்வாகம் திருப்பித்தர வேண்டிய கட்டணத்தை கழித்துக் கொண்டு தான் பல்கலைக்கழகம் வசூலித்திருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே செலுத்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும், அடுத்த பருவத்தேர்வுக்கான கட்டணத்தை முழுமையாகத் தான் செலுத்த வேண்டும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்து விட்டது. அதேபோல், மதிப்பெண் சான்றிதழுக்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.37, தேர்வு விண்ணப்பத்திற்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.12 ஆகியவற்றையும் திருப்பித் தர பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி, Extension activities என்ற பாடத்திற்கு இதுவரை தேர்வுக்கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில், இப்போது அதற்கும் தேர்வுக்கட்டணமாக ரூ.90 செலுத்த வேண்டும் என்று கூறி அனைத்து மாணவர்களிடமும் பல்கலைக்கழகம் வசூலித்து விட்டது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இந்த வணிக நோக்கம் கொண்ட செயல் கண்டனத்துக்குரியது.
ஒவ்வொரு மாணவரும் சராசரியாக 5 தாள்களை எழுதும் நிலையில், ஒரு தாளுக்கு ரூ.17 வீதம் மொத்தம் ரூ.85 கூடுதலாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. மற்ற கட்டணங்களையும் சேர்த்தால் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் மொத்தம் ரூ.224 கூடுதலாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்களிலும் இதேபோல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வகையில் மட்டும் மாணவர்களிடமிருந்து ரூ.44.80 கோடி கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவம் படிக்கவும், பொறியியல் படிக்கவும் வசதி வாய்ப்பில்லாத மாணவர்கள் தான் கலை & அறிவியல் கல்லூரிகளில் படிக்க வருகிறார்கள். அவர்களிடம் தேர்வுக்கட்டணம் என்ற பெயரில் பல்கலைக்கழகங்களே கொள்ளையடித்தால், ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு படிப்பதற்கு தயங்குவார்கள்.
பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கான கட்டமைப்பை மேம்படுத்தி, பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டால், கோடிக்கணக்கில் நிதி உதவி வழங்க பல்கலைக்கழக மானியக்குழு காத்திருக்கிறது. அதேபோல், பல்கலைக்கழகங்களுக்கு பொருட்களை கொள்முதல் செய்வதில் நடக்கும் முறைகேடுகளை கலைந்தாலே பல கோடி பணம் மிச்சமாகும். இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால், பல்கலைக்கழகத்திற்கு பெருமளவில் வருவாய் கிடைக்கும் என்ற நிலையில் மாணவர்களிடமிருந்து பணம் பறிக்க முயல்வது சரியல்ல. மாணவர்களை பணம் காய்க்கும் மரங்களாக கருதுவதை பல்கலைக் கழகங்கள் கைவிட வேண்டும். அவர்களிடம் கூடுதலாக வசூலித்த பணத்தை திரும்பத் தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.