யாருடைய வழிகாட்டுதலுக்கும் இடம் தரக்கூடாது. முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு ராம்தாஸ் அறிவுரை
தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு பின்னர் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பாமக தலைவர் டாக்டர் ராம்தாஸ் அறிவுரை கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 32 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றிருக்கிறது. புதிதாக பெறுப்பேற்றுள்ள முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு பதவியேற்றுள்ள நேரம் மிகவும் நெருக்கடியாக காலகட்டம் தான் என்ற போதிலும், அவசரமாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளும், கடமைகளும் அதிகமாக உள்ளன.
2011-ம் ஆண்டில் பதவியேற்ற ஜெயலலிதா தலைமையிலான அரசு நத்தை வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது என்றால், 2014-ம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு பதவி இழந்த பிறகு அரசின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. அதன்பின் அரசின் இயக்கம் இன்று வரை வேகம் பெறவில்லை. தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள பன்னீர்செல்வம் கடந்த ஆட்சியில் 8 மாதங்கள் முதலமைச்சராக இருந்தார்; இப்போதைய ஆட்சியில் 48 நாட்களுக்கு முதலமைச்சர் பொறுப்புகளை கவனித்துக் கொண்டார். ஆனால், இந்தக் காலத்தில் விசுவாசத்தை தான் காட்டினாரே தவிர, திறமையைக் காட்டவில்லை. அதற்கான வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. அவரது கைகள் கட்டப்பட்டிருந்தது உட்பட ஏராளமான காரணங்கள் இதற்கு இருக்கலாம்.
ஆனால், இப்போது அவருக்கு எந்த தடையும் இருப்பதாகத் தோன்றவில்லை.
இன்னும் நான்கரை ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில், தீர்ப்பதற்கான பிரச்னைகளும், ஆற்றுவதற்கான பணிகளும் ஏராளமாகவே உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்காக புதிய அரசு முழுவீச்சில் செயல்பட வேண்டும். யாருடைய வழிகாட்டுதலுக்கும் இடம் தராமல் அரசியல் சட்டத்தை மட்டுமே வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட வேண்டும். அரசின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் குறித்து அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் எவருடனும் விவாதிக்காமல், பதவியேற்பின் போது அரசியலமைப்புச் சட்டத்தின் 164(3)பிரிவின் கீழ் ஏற்றுக் கொண்ட,‘‘தமிழ்நாட்டு மாநில அமைச்சர் என்ற முறையில் எனக்குத் தெரியவரும் அல்லது எனது பரிசீலனைக்காக வரும் எந்த விஷயத்தையும், அமைச்சர் என்ற முறையில் எனது கடமைகளை ஆற்றுவதற்காகத் தவிர வேறு எதற்காகவும் யாருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிக்க மாட்டேன் என்று கடவுளின் பெயரால் உறுதியேற்கிறேன்’’என்ற உறுதிமொழியை முழுமையாக மதித்து நடக்க வேண்டும்.
நல்லாட்சிக்கான இலக்கணங்களை மதித்து ஆட்சி செய்தால் புதிய அரசை மக்கள் வாழ்த்துவார்கள். மாறாக மற்றவர்களின் அதிகார வீச்சுக்கு பணிந்து, ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தால் மக்களே விரட்டியடிப்பார்கள் என்பதை புதிய அரசும், அமைச்சர்களும் உணர வேண்டும்”
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.