எஸ்.ஆர்.எம். தலைவர் பச்சமுத்து மீது அவதூறு வழக்கு. திசை திரும்புகிறது மதன் விவகாரம்

எஸ்.ஆர்.எம். தலைவர் பச்சமுத்து மீது அவதூறு வழக்கு. திசை திரும்புகிறது மதன் விவகாரம்
ramdoss
வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் கடந்த சில நாட்களுக்கு முன் கங்கையில் சமாதி அடைவதாக கூறி மாயமாகிவிட்ட நிலையில் அவர் மீதும், எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்கள் மீதும் ஏராளமான மோசடி குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. இந்நிலையில் பாமக நிறுவனர் ராம்தாஸ் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த அறிக்கைக்கு பச்சமுத்து காட்டமான பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த அறிக்கையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கருத்துக்கள் இருப்பதாக கூறி, எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்று பாமக தரப்பில் இருந்து தொடரப்பட்டுள்ளது.

சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பெருநகர 15-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், பா.ம.க.வின் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சத்திய நாராயணன் என்பவர், பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு எதிராக அவதூறு வழக்கு   தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ”வன்னியர் சங்கத்திலும், பா.ம.க.விலும் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை நான் வகித்துள்ளேன். தமிழ் நாளிதழ்களில், கடந்த 11-ம் தேதி பச்சமுத்து சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது இரண்டு திராவிட கட்சிகளுக்கும் இணையாக செய்தித்தாள்களில் கோடி கோடியாக பணம் செலவழித்து பா.ம.க. விளம்பரம் செய்ததே, அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்க முடியுமா பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது கட்சிக்காரர்கள் மூலம் பணம் கேட்டு தன்னிடம் கை நீட்டியதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான அவதூறான கருத்துகளாகும். இந்தக் கருத்தால் பா.ம.க.வின் ஒவ்வொரு தொண்டனுக்கும், பொது மக்கள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துயுள்ளது. மேலும், இது பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. எனவே, பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அறிக்கை வெளியிட்ட பச்சமுத்து மீது, இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராமதாசின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக உரிய இழப்பீட்டினை பச்சமுத்துவிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும்” என்று கோரி இருக்கிறார்.

நீதிபதி ஈஸ்வர மூர்த்தி முன் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை, வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வேந்தர் மூவீஸ் மதன் மாயமானது குறித்த விவகாரத்தை திசை திருப்பவே ராமதாஸ்-பச்சமுத்து விவகாரத்தை பெரிதாக்குவதாக அரசியல் விமர்சகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply