தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறி மற்றும் பழங்களுக்கு கேரளம் மற்றும் வளைகுடா நாடுகள் தடைவிதித்துள்ளதால் விளைச்சல் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என எச்சரித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இயற்கை வேளாண்மைக் கொள்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தின் மண் வளம் தொடர்பாக தமிழக அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் மண் வளம் பாதியாக குறைந்து விட்டதாகவும், இதே நிலை தொடர்ந்தால், ஒரு காலத்தில் வளம் கொழிக்கும் பூமியாக திகழ்ந்த, தமிழகம் வேளாண்மைக்கு தகுதியற்ற பூமியாக மாறிவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பசுமைப் புரட்சி என்ற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள நிலங்கள் மலடாக்கப்பட்டதால் இக்காலத் தலைமுறை அனுபவித்து வரும் பாதிப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் இரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் வழக்கமே கிடையாது. மக்கிய பசுந்தழைகள், கால்நடைகளின் கழிவுகள் ஆகியவை தான் முதன்மை உரங்களாக பயன்படுத்தப் பட்டன. இவை உரமாக மட்டுமின்றி, இயற்கைப் பூச்சிக் கொல்லிகளாக செயல்பட்டன. இதனால் தமிழக வயல்கள் சத்து நிறைந்த உணவு வகைகளை உருவாக்கித் தந்தன. ஆனால், பசுமைப் புரட்சி என்ற பெயரில் பாழாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தமிழகத்தின் வயல்வெளிகள் இரசாயனஉரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளால் நிரப்பப்பட்டன. அதன் விளைவு தாய்ப்பாலுக்கு நிகரான சத்து நிறைந்த உணவுகளை தந்த மண் இப்போது நஞ்சு நிறைந்த உணவுகளை விளைவிக்கிறது.
நிலங்களை தாயாக கருதி கவனிக்காமல், உணவு தானியங்களை உற்பத்தி செய்து வழங்கும் எந்திரமாக கருதி செயல்பட்டதால் மண் வளம் மோசமான நிலைக்கு சென்று விட்டது. மண் வளமாக இருக்க வேண்டுமானால் அதன் இயற்கை கார்பன் அளவு 0.80% முதல் 1.30% வரை இருக்க வேண்டும். ஆனால், தமிழக நிலங்களின் இயற்கை கார்பன் அளவு 1971 ஆம் ஆண்டின் அளவான 1.20 விழுக்காட்டிலிருந்து 2002&ஆம் ஆண்டில் 0.68% ஆகவும், இப்போது 0.50% ஆகவும் குறைந்து விட்டது. குறிப்பாக மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, விழுப்புரம், நாமக்கல், கடலூர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் விளைநிலங்கள் கிட்டத்தட்ட மலடாகிவிட்டன.
இந்த நிலங்களை வளம் நிறைந்ததாக மாற்ற வேண்டுமானால் இயற்கை வேளாண்மை செய்வது மட்டும் தான் ஒரே வழியாகும். உரங்களைக் கொண்டு செய்யப்படும் வேளாண்மையின் தீமைகளை உணர்ந்த பலரும் இயற்கை விவசாயத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் கர்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், குஜராத், ஒதிஷா, சிக்கிம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் விரிவான இயற்கை வேளாண் கொள்கையை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. கேரளத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இயற்கை விவசாயம் மட்டுமே நடைபெறுகிறது. 2016 &ஆம் ஆண்டு ஜனவரிக்குள் கேரளத்தை முழுமையான இயற்கை வேளாண்மை மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இயற்கை வேளாண்மையை வெற்றிகரமாக செயல்படுத்துவது எப்படி? என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக மத்திய பிரதேசம் திகழ்கிறது. இயற்கை வேளாண்மை மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களில் 40% மத்திய பிரதேசத்தில் இருந்து தான் கிடைக்கிறது.
இயற்கை வேளாண்மையின் உதவியுடன் தான் மத்திய பிரதேசம் 2013-14 ஆம் ஆண்டில் 24.99% வேளாண் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இது இந்தியாவில் இதுவரை எந்த மாநிலமும் எட்டிப்பிடிக்காத வேளாண் வளர்ச்சி ஆகும். அதேநேரத்தில் இயற்கை வேளாண்மையை தமிழகம் உதாசீனப்படுத்துவதால் தான் அதன் வேளாண் வளர்ச்சி மைனஸ் 12.10% என்ற அதல பாதாளத்திற்கு சென்றிருக்கிறது. தமிழகத்தில் சீரழிந்து வரும் மண்வளத்தை சீரமைத்து வளத்தையும், விளைச்சலையும் பெருக்குவதற்காக சிறப்பு இயற்கை வேளாண் மண்டலங்களை அமைக்க வேண்டும் என்று வேளாண் பல்கலைக்கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதைத்தொடர்ந்து 18 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டு வரைவு இயற்கை வேளாண்மைக் கொள்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட போதிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை கிடைக்காததால் அந்த வரைவுக் கொள்கை அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் படிந்திருப்பதாகக் கூறி அவற்றை வாங்க கேரளம் மறுத்து வருகிறது. வளைகுடா நாடுகளும் தமிழகத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களின் இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் விளையும் பொருட்களை மற்ற மாநிலங்கள் சீண்டாது என்பதுடன், விளைச்சலும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. எனவே, வரைவு இயற்கை வேளாண்மைக் கொள்கையை உடனடியாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும். அக்கொள்கையின்படி தமிழகம் முழுவதும் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி வேளாண்மை செய்வதை ஊக்குவிக்க வேண்டும். மேலும், மாநிலமெங்கும் சிறப்பு இயற்கை வேளாண் மண்டலங்களை அமைத்து சத்து நிறைந்த, நச்சு இல்லாத உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டும். அந்த மண்டலங்களுக்கு இயற்கை வேளாண்மைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட நம்மாழ்வாரின் பெயரை தமிழக அரசு சூட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.