தமிழகத்தில் ஜோதிர்லிங்கமாய் திகழும் இராமேஸ்வரம் திருக்கோயில் அமைய மூல காரணமாய் நின்ற அகத்தியருக்கு, அகத்திய தீர்த்தம் அருகே இருந்த பழைய திருக்கோயில் கடந்த சில மாதங்களாக புனரமைக்கப்பட்டு இன்று வெகுவிமரிசையாக மகாகும்பாபிஷேகம் நடந்தது. இந்த மகாகும்பாபிஷேகத்திற்கு பெருந்திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இலங்கையை வென்று திரும்பிய ஸ்ரீராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் போக்க, லிங்க பிரதிஷ்டை செய்ய உபதேசம் செய்து, பின் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமே இராமநாத சுவாமி ஆவார். தீர்த்தங்களில் தலையாய தீர்த்தங்களை கொண்ட ராமேஸ்வரத்தில், ராமருக்கு அகத்தியர் உபதேசம் செய்த இடத்தில் ‘அகத்தியதீர்த்தம்” என்னும் தீர்த்தமும், சிறிய அளவிலான அகத்தியர் திருக்கோயிலும் உள்ளது. இந்த திருக்கோயிலின் திருப்பணிகள் இனிதே முடிந்து இன்று கும்பாபிஷேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
17 அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன இந்த திருக்கோயிலின் தரை தளத்தில் எட்டு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக சிற்றம்பல எந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அகத்திய மஹா குருவின் கருவரையின் மேற்புறத்தில் 3 அடி நீளமும், 3 அடி அகலமும் உள்ள ஸ்ரீமஹா சிற்றம்பல எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சிவபரம்பொருளின் ஸ்வருபமாகவும், பிரபஞ்ச சக்தியை உள்ளடைக்கிய பரம பவித்ரமான எந்திரத்தில் ஒரு கோடி முறை பஞ்சாட்சர ஜபம் மற்றும் அகத்திய நாம பாராயணமும் செய்து 10 இலட்சம் ஹோமங்கள் நடத்த்தியும் உலக நன்மைக்காக இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
எட்டு இதழ்கள் கொண்ட தாமரை கமலங்கள் உள்ள பீடத்தின் மேல் மஹா குரு அகத்தியரின் திருவடிகள் பிரதிஷ்டிக்கப்பட்டு அதன் கீழ்புறத்தில் கயிலை முதல் ராமேஸ்வரம் வரை உள்ள புண்ணிய ஷேத்திரங்களின் கற்களாலும், மண்ணினாலும் நிரப்பப்பட்டு மேற்கூரிய பீடங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை மிகவும் சிறப்பாக நடந்த இந்த மகாகும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வருகை தந்து அகத்தியரின் ஆசியை பெற்ற பக்தகோடிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகள் சிறப்பாக நடைபெற நன்கொடை கொடுத்து உதவிய அனைவருக்கும் விழாக்குழுவினர் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.