ஆடி திருக்கல்யாண திருவிழாவினை முன்னிட்டு ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் தேரோட்டம் நடந்தது.
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தினமும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று காலை, மாலைகளில் வீதி உலா நடைபெற்றது.
திருவிழாவின் 9ஆம் நாளான இன்று (29ஆம் தேதி) காலை 11 மணியளவில் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் தேரோட்டம் துவங்கியது. ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட தேரில் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருள பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோயிலின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேர் 12.30 மணியளவில் நிலையினை அடைந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இந்த தேரோட்டத்தில் திருக்கோயிலின் தக்கர் குமரன்சேதுபதி, நகர்மன்ற தலைவர் அர்ச்சுனன், திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், அறநிலையத்துறை கோட்ட பொறியாளர் மயில்வாகனன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், நகரின் முக்கிய பிரமுகர்கள் கே.முரளிதரன், என்.தேவதாஸ், ஏ.கே.என்.சண்முகம், கவுன்சிலர்கள் மீனாட்சிசுந்தரம், ராதாகிருஷ்ணன், முனியசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.