ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் திருப்பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.
இலங்கை மன்னன் ராவணனை வதம் செய்த ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிட, சீதை ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சிவலிங்கம் உருவாக்கினார். அதனை ராமர் பூஜை செய்து வணங்கியதால், அந்த இடத்தில் கோயில் உருவாகி ராமநாதசுவாமி கோயில்
என்றழைக்கப்பட்டது. இக்கோயிலுக்கு அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால் ரூ. 8.23 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெறுகிறது.
இதில் ரூ. 37 லட்சத்தில் கிழக்கு, மேற்கு ராஜகோபுரங்கள் மராமத்து பணியும், ரூ. 2 கோடியில் மூன்றாம் பிரகாரம் துாண்கள் மராமத்து பணியும், முதல் பிரகாரத்தில் சுவாமி, அம்மன் சன்னதியில் துாண்கள், சிற்பங்கள் பழமை மாறாமல் வாட்டர் வாஷ் செய்து, வார்னிஷ் பூசும் பணி முடிந்து, புதுபொலிவுடன் உள்ளது.
மேலும் ரூ. 3.71 கோடியில் வடக்கு, தெற்கு புதிய ராஜகோபுரங்கள் அமைத்தல், ரூ. ஒரு கோடியில் பர்வதவர்த்தினி அம்மன் முன் புதிய கருங்கல் மண்டபம் அமைத்தல், ரூ. 40 லட்சத்தில் 2ம், 3ம் பிரகார மதில் சுவர்கள் மராமத்து செய்து வர்ணம் பூசும் பணி, ரூ. 75 லட்சத்தில் சுவாமி, அம்மன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், விநாயகர்கள், சுப்பிரமணியர்கள், நடராஜர், அனுமான், மகாலெட்சுமி, சேதுமாதவர், பைரவர் ஆகிய சன்னதியின் விமானங்களுக்கு மராமத்து செய்து வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடக்கிறது.