சுவாதியை கொலை செய்தது எப்படி? நடித்து காட்டிய ராம்குமார்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் ஊழியர் சுவாதியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாரின் அணிவகுப்பு சமீபத்தில் நடந்த நிலையில் தற்போது அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதில் ஒரு கட்டமாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை சம்பவம் எப்படி நடந்தது என்பதை நடித்து காட்டினார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்கள் விசாரணையில் ராம்குமார் இருந்தபோது 13-ம் தேதி நள்ளிரவில் ரயில் போக்குவரத்து இல்லாத சமயத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றோம். பயணிகள், பொதுமக்கள் இல்லாத நேரத்தில் எந்த மீடியாக்களுக்கும் தகவல் கசியாத வகையில் ராம்குமாரை அங்கு கொண்டு சென்றோம். பின்னர் கொலை செய்த விதத்தை நடித்து காட்ட சொன்னோம்.
கொலை நடந்த தினத்தன்று ராம்குமார் வந்த வழி, சுவாதியை எங்கே எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தார், பின்னர் அவரை நெருங்கி வெட்டிய விதம், வெட்டு விழுந்த விதம், எத்தனை முறை வெட்டினார், தப்பி ஓடிய விதம், எந்த வழியாக தப்பி ஓடினார். அரிவாளை தூக்கி எறிந்த இடம், மேன்ஷனுக்கு கடந்து சென்ற தெருக்கள் போன்றவற்றை நடித்துக் காட்டினார். நாங்கள் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளோம்.
ராம்குமார் ரயில் நிலையத்தில் இருந்து தப்பி செல்லும் காட்சிகள் 3 சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. ராம்குமாரும்,வீடியோ காட்சியில் இருக்கும் நபரும் ஒருவர்தானா என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். முடிவு வந்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். ராம்குமார் ஆத்திரத்தில் சுவாதியை வெட்டிக் கொன்று விட்டதாகவும் இப்போது நினைத்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது” என்றும் கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராம்குமாரை 3 போலீஸார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இன்னும் மன அழுத்தத்தில் இருந்து அவர் மீண்டும் வரவில்லை என்றும் இதுவரை பெற்றோரு அல்லது உறவினர்களை சந்திக்க அவர் விருப்பப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.