ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கில் நீதிபதிகளுக்குள் முரண்பாடு. 3வது நீதிபதிக்கு மாற்றம்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த ஞாயிறு அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ள நிலையில் ராம்குமாரின் தந்தை ‘எனது மகன் மரணத்தில் மர்மம் உள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் குழுவில் தங்களது தரப்பு மருத்துவர் ஒருவரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராம்குமாரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யும் டாக்டர் குழுவில் தனியார் மருத்துவர் ஒருவரை சேர்ப்பது தொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகளுக்குள் மாறுபட்ட கருத்து ஏற்பட்டதால் வழக்கின் தீர்ப்பு மூன்றாவது நீதிபதியின் உத்தரவுக்காக தள்ளிவைக்கப்பட்டது. தீர்ப்பு வரும்வரை பிரேதப் பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு விடுத்த கோரிக்கையை அரசுத் தரப்பு கடுமையாக எதிர்த்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு தரப்பில் நம்பிக்கை இல்லாதபோது மனுதாரர் கோரும் தனியார் மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்த வழிவகை உள்ளது. இது சிறைக்குள் நடந்த மரணம். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
ஆனால், இதில் அரசுத் தரப்பு வாதப்படி தனியார் மருத்துவருக்கு பதிலாக அரசு மருத்துவரை 5-வது நபராக சேர்க்கலாம் என சக நீதிபதியான எஸ்.வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் எங்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லாததால், நீதிமன்ற பதிவுத்துறை இந்த வழக்கை மூன்றாவது நீதிபதியின் உத்தரவுக்காக தலைமை நீதிபதி முன்பாக பட்டியலிட வேண்டும். அதுவரை பிரேதப் பரிசோதனை நடத்தக்கூடாது. இவ்வாறு உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார். இதையடுத்து விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.