ஹரியாணா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். அவரை கைது செய்ய விடாமல் ஆசிரமத்திற்குள் அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்கள் என்ற பெயரில் தங்கியிருந்த சுமார் 15000 பேர்களை நேற்று அதிரடியாக வெளியேற்றிய பின்னர் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹரியானாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
ஹரியாணாவின் ஹிஸார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா என்ற நகரில் ஆன்மீக ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ராம்பால் மீது கொலை உள்பட பல வழக்குகள் பதிவாகியிருந்தது. இந்த வழக்குகளில் அவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு இட்டிருந்ததை அடுத்து ஹரியானா போலீஸார் நேற்று முன் தினம்அந்த ஆசிரமத்துக்குச் சென்றனர். ஆனால் ராம்பாலின் ஆதரவாளர்கள் துப்பாக்கி சூடு உள்பட பல வன்முறையில் ஈடுபட்டதால் சாமியாரைக் கைது செய்ய இயலவில்லை.
இந்நிலையில், நேற்று அதிரடியாக சாமியார் ராம்பாலைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாமியார் இன்று ஹிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பானிபட் காவல்துறைக் கண்காணிப்பாளர் சதீஷ் பாலன் தெரிவித்தார்.