அவரகளை கைது செய்ய வேண்டும்: பா.ரஞ்சித் கூறுவது யாரை?
மானாமதுரை அருகே 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ‘காலா’ பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஏற்பட்ட சாதிய மோதலில் 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். தாக்குதலில் காயம் அடைந்த 5 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இன்று இயக்குனர் ரஞ்சித் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கச்சநத்தம் கிராமத்தில் நடைபெற்ற மோதலுக்கு முன்விரோதம் மட்டுமே காரணம் அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது.
கொல்லப்பட்ட குடும்பத்துக்கு நிதி உதவி அறிவித்தால் மட்டும் போதாது. கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
மோதலுக்கு முன்னதாகவே பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் போலீசார் அதனை கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இதுபோன்ற கொடூரம் நடந்துள்ளது. எனவே இந்த மோதல் குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்.
கச்சநத்தம் மோதலில் படித்த வாலிபர்களை குறி வைத்து தாக்கியிருக்கிறர்கள். விவசாயம் செய்பவர்களின் கைகளை வெட்டியிருக்கிறார்கள். இனிமேல் அவர்கள் எப்படி விவசாயம் செய்ய முடியும்? அவர்கள் வாழ்வாதாரமே முடங்கியுள்ளது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரது குடும்பத்தினருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.