மோடி அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர் ஒருவர் மீது ராஜஸ்தான் பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளதை அடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அவரது கணவரே மதுகொடுத்து அவரை மயக்கமடைய செய்து தனது நண்பர்கள் 17 பேர்களுடன் பலாத்காரம் செய்ததாக திடுக்கிடும் புகார் ஒன்று, கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்டது. அந்த 17 பேர்களில் ஒருவரான நிஹல்சந்த் மெக்வால், தற்போது மத்திய அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜெய்ப்பூர் பெண் கூறியது பொய்ப்புகார் என்று இந்த வழக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் அந்தப் பெண் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதுகுறித்து அந்தப் பெண் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் என்னால் நிம்மதியாக வாழ முடியும். நிஹல்சந்த், மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்கும் வரை விசாரணை நேர்மையாக நடக்காது. இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.