நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளி ஒருவரை பொதுமக்கள் அடித்து கொலை செய்தது குறித்து அறிக்கை தருமாறு நாகாலாந்து அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “சிறைக்குள் கொலை செய்த கும்பல் எப்படி நுழைந்தது? சிறைக கைதியை அவர்கள் இழுத்து வந்து கொலை செய்யும் வரை அங்கிருந்த சிறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பது குறித்து விளக்கம் தரும்படி கேட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சம்பவம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் விவாதித்ததாகவும் உடனடியாக தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்குமாறு நாகலாந்து அரசை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து நாகாலாந்து முதல்வர் டி.ஆர்.ஜிலியாங் அசாம் முதல்வர் தருண் கோகோயை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், திமாப்பூர் மத்திய சிறையை உடைத்து விசாரணை கைதியை கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்று தருண் கோகோயிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திமாப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்