தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கூடுதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுங்கக்கட்டணமே அதிகம் என வாகன உரிமையாளர்கள் கருதி வரும் நிலையில் இன்று முதல் அதிகரிக்கப்படும் சுங்கக்கட்டணத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உட்படுவார்கள் என கூறப்படுகிறது.
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 234 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு அதற்குரிய சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறாது. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய 1992 ஆம் ஆண்டு ஒப்பந்த விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1 ஆம் தேதியும், 2008 ஆம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதியும் கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது. அதன்படி இந்த சுங்கச்சாவடிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 2008 ஆம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு இன்று முதல் கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது.
இதன்படி தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம்-சூரப்பட்டு, வானகரம், காஞ்சிபுரம் மாவட்டம்-ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத்திரம், விழுப்புரம் மாவட்டம்-பரனூர், சேலம் மாவட்டம்-ஆத்தூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மாவட்டம்-சாலைபுதூர், வேலூர் மாவட்டம்-பள்ளிகொண்டான், வாணியம்பாடி, நெல்லை மாவட்டம்-எட்டூர்வட்டம், கப்பலூர், நாங்குநேரி, திருச்சி மாவட்டம்-சிட்டம்பட்டி, புதுக்கோட்டை, மதுரை மாவட்டம்-பூதக்குடி, சிவகங்கை மாவட்டம்-லெம்பலாக்குடி, லட்சுமணப்பட்டி மற்றும் சென்னை புறவழிச்சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடி உள்பட 20 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது.
இந்த சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதில் பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் 3 முதல் 5 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும், மொத்த குறியீட்டு வேறுபாடு என்று மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சிமெண்டு, பால் போன்ற 300 வகையான பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்துக்கு தகுந்தவாறு அவ்வகை பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு 40 சதவீதம் வரை கட்டணம் உயரவும் செய்யலாம், குறையவும் செய்யலாம் என்று நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சுங்க கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் முறையினை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.