2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு ஜூன் 30 என்று இருந்த நிலையில் தற்போது அந்த காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
இந்தியாவில் கள்ள நோட்டுகளின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பாதுகாப்புகள் நிறைந்த 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா அச்சடித்துள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மட்டும் புழக்கத்தில் விடும் நோக்கத்தில் 2005ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட இதே மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை நாட்டின் பாதுகாப்பு கருதி இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற முடிவு செய்தது.
இதையடுத்து,, 2005ஆம் ஆண்டு முன்னர் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி என்றும் அதன்பின்னர் அந்த ரூபாய்கள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடுவை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் இதற்கு மேலும் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது..