பிப்ரவரி 1 முதல் பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை. ரிசர்வ் வங்கி
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது. அதுமட்டுமின்றி வங்கியில் இருந்தும் ஏடிஎம்களில் இருந்தும் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
வங்கிக்கணக்கில் தங்களுடைய சொந்த பணத்தை அவசர தேவைகளுக்கு கூட எடுக்க முடியாமல் நாடு முழுவதும் பொதுமக்கள் சிரமத்தில் இருந்தனர். குறிப்பாக நடப்பு கணக்கு வைத்திருந்த வியாபாரிகள் தேவையான அளவு பணம் எடுக்க முடியாத சூழ்நிலையில் வியாபாரம் முடங்கியது.
இந்நிலையில் பிப்ரவரி 1 முதல் வங்கிக்கணக்கில் இருந்தும் ஏடிஎம்களில் இருந்தும் பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை என்றும் தேவையென்றால் அந்தந்த வங்கிகளே ஒரு குறிப்பிட்ட தொகையை உச்சவரம்பாக நியமித்து கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆனால் இந்த அறிவிப்பு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது. சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடு தொடரும் என்றும் நடப்பு கணக்கு, சிசி கணக்கு, ஓவர் டிராப்ட் கணக்கு ஆகிய கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இனி வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க எவ்வித கட்டுப்பாடும் இல்லை.