ரிசர்வ் வங்கி அச்சகத்தில் ரூ.90 லட்சம் திருடிய அதிகாரி கைது

ரிசர்வ் வங்கி அச்சகத்தில் ரூ.90 லட்சம் திருடிய அதிகாரி கைது

இந்திய ரிசர்வ் வங்கி அச்சகத்தில் ரூ.90 லட்சம் புதிய நோட்டுகளை திருடி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பதுக்கி வைத்த அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேவாஸ் என்ற இடத்தில் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகம் உள்ளது. இங்கிருந்து புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கி மூலமாக வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இங்கு உயர் அதிகாரிகள் பழைய நோட்டுகளின் வரவு, புதிய நோட்டுகள் அச்சடிப்பு விவரம் போன்றவற்றை தணிக்கை செய்தனர். அப்போது ரூ.90 லட்சம் மதிப்புள்ள புதிய கரன்சி நோட்டுகளின் இருப்பு குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அங்கு பணியாற்றும் டெல்லி அதிகாரியான மனோகர் வர்மா மீது சந்தேகம் ஏற்பட்டது. இவர் அங்கு ரூபாய் நோட்டுகள் சரிபார்ப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதையடுத்து ரூபாய் நோட்டு சரிபார்ப்பு மையத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாரி மனோகர் வர்மா அங்குள்ள ஒரு காலி மரப்பெட்டியில் ரூபாய் நோட்டுகளை அடுக்கி வைக்கிறார். தனது ஷூ, சட்டை, பவுசரிலும் ரூபாய் நோட்டுகளை செருகி வைக்கிறார்.

இதை வைத்து அவர்தான் ரூபாய் நோட்டுகளை திருடியது தெரியவந்தது. அவரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அவரது லாக்கரிலும் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் பழைய ரூ. 500 நோட்டுகள், ரூ.200 புதிய நோட்டுகள் சிக்கியது. வீட்டில் உள்ள படுக்கை அறையில் தலையணை மற்றும் மெத்தையில் ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத் திருந்தார். குளியலறையிலும் கட்டு, கட்டாக ரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்திருந்தார்.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மனோகர் வர்மாவை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர் 1984-ம் ஆண்டு இங்கு செல்லாத நோட்டுகள் பிரிவில் சாதாரண குமாஸ் தாவாக வேலை பார்த்தார். பின்னர் சூப்பர் வைசராக பதவி உயர்வு பெற்றார். தற்போது வர்மா கைது செய்யப்பட்டு இருப்பதுடன் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply