ஒவ்வொரு வருடமும் காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று ரோஜாப்பூ வியாபாரம் அமோகமாக இருக்கும் என்பதால் ரோஜா வியாபாரிகள் தற்போது முதலே தயாராகி வருகின்றனர்.
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவில் இவ்வருடம் ரோஜா மலர்கள் ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் அதே நேரத்தில் உள்ளூர் மார்க்கெட்டிலும் ரோஜா மலர்களின் தேவை அதிகரித்து உள்ளதாகவும் புனேவை சேர்ந்த ரோஜா ஏற்றுமதி வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புனே மற்றும் பெங்களூரில் இருந்துதான் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி ஆகின்றது. சென்ற ஆண்டு 423 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வருடம் இதைவிட அதிகளவில் ஏற்றுமதி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ரோஜாப்பூவின் விலை சராசரியாக கடந்த வருடம் ரூ.10 என இருந்ததாகவும், இவ்வருடம் இந்த விலையில் ஏற்றம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ரோஜாப்பூ காதலர்களுக்கு பிடித்த பூ என்பதால் பெரும்பாலானோர் விலை குறித்து பேரம் பேசுவதில்லை என பெங்களூரில் உள்ள ரோஜா மலர்கள் சில்லறை வியாபாரி ஒருவர் கூறினார்.