சொந்த வீடு கனவு மெய்ப்பட என்ன செய்ய வேண்டும்.

சொந்த வீடு என்பது இந்திய குடும்பங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரு பொதுவான கனவு. “வீட்டை கட்டிப்பார்” என்ற சொலவடை நெடுங்காலமாய் நம் வாழ்வுடன் பயணித்து கொண்டிருப்பது இதை உறுதிப்படுத்தும். இப்படி அனைவரின் கனவாக உள்ள “ஒரு சொந்த வீடு”, சமீப கால பொருளாதார சிக்கல்களால் மேலும் களையிழந்து அனைவருக்கும் எட்டாக் கனியாய் போய்விடுமோ என்று அச்சம் இன்றளவும் அனைவரையும், குறிப்பாக நடுத்தர குடும்பங்களை பெரிதும் ஆட்டிப்படைக்கிறது.

சமீபத்திய நிதி அமைச்சரின் அறிவுப்பும் அதன் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் நடவடிக்கைளும் இதற்கு அருமருந்தாக அமையுமா என்பதை காலமே முடிவு செய்யும். ஆனால் இது ஒரு கனவை நனவாக்கும் முயற்சியின் ஒரு தொடக்கம் என்பது மட்டும் உறுதி. நிதி அமைச்சர் அருண் ஜெட் நடப்பு நிதி ஆண்டிற்கான வரவு செலவு கணக்கை பாராளுமன்றத்தில் சமர்பித்த போது அதை பெரிதும் வரவேற்றது ரியல் எஸ்டேட் மட்டும் கட்டுமானத்துறை தான். தனியார் முதலீடுகளை கவர்வதில் உள்ள இக்கட்டுகளை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தில் நவடைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களின் கனவான சொந்த வீட்டை நனவாக்கும், முயற்சியின் ஒரு அங்கமான இச்செயலை இத்துறைகள் வரவேற்றதில் வியப்பேதுமில்லை.

எந்த ஒரு பொருளாதார வீழ்ச்சியிலும் முதில் தாக்குதலுக்குண்டாவதும் பின் எழுச்சியில் கடைசி இடத்தை பிடிப்பதும் இத்துறைகள் தான். இன்றைய நிலையில் இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், ஒரு புறம் வீடுகள் விற்பனையாகாமல் இருப்பது, மறு புறம் இதன் காரணமாய் விலை பெரிதும் வீழ்ச்சி அடையாதிருப்பதும் தான். பொருளாதாரம் இதுவரை நமக்கு சொல்தந்த பாடமான, அதிக பொருட்களின் வரவு விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற கொள்கைக்கு நேர்மாறாக இச்செயல்அமைந்துள்ளது.

நாம் சற்று பின்னோக்கி பயணித்தால் இதற்கான காரணம் புலப்படும். தாரளமயமாக்கலுக்கான ஒரு விலையாகத்தான் நாம் இதை கொள்ள
வேண்டும். நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். உலகமயமாக்கலுக்கு முன் மற்றும் பின். வருமானத்தில் சிறிதளவே சேமிக்க முடிந்த குடும்பங்கள் தாரளமயமாக்கலுக்குப் பின் குறிப்பிடதக்க அளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி கன்டன. குறுகிய கால இந்த அசுர வளர்ச்சி மற்றும் அதன் காரணமாய் நிலவிய அதிகப்படியான பணப்புழக்கம் மற்று ம் வாங்கும் திறன் மக்களை ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளுக்கு அழைத்து சென்றது. இந்தியர்கள் பெரும்பாலும் வீடு, நிலம், தங்கம் மற்றும் வங்கிகளிலேயே முதலீடு செய்கிறார்கள். பங்கு சந்தை அவர்களை இதுவரை பெரியளவில் கவர்ந்ததில்லை.

இப்படி அதிகப்படியான மக்களின் வீட்டுத்தேவையை ஈடுகட்ட இந்தியாவில் சொல்லதக்க அளவில் நிறைய நிறுவனங்கள் இல்லை. இருந்த சிலவும் ஒரு குறிப்பிட்ட பூகோள எல்லையிலேயே தங்களின் பெரும்பாலான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தன.

இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்க கூட்டமைப்பு (CREDAI) போன்ற அமைப்புகள் இருந்தாலும் பரந்து விரிந்த இத்தொழில், சிறிய அளவில் கட்டுமானத்தில் ஈடுபடுபவர்களின் ஆதிக்கமே உள்ளது. இத்துறையும் எந்த ஒரு பொது மத்திய ஆணையத்தின் கீழும் இயங்குவதில்லை. பெரும்பாலும் இவர்களின்  நடவடிக்கைகள் அந்தந்த மாநிலம் மற்றும் உள்ளூர் சந்தையை சார்ந்தே இருக்கிறது.

குறுகிய காலத்தில் அபரீத வளர்ச்சி கண்ட இத்துறை, 2008ம் ஆண்டு துணை அடமான கடன் நெருக்கடிக்கு பிறகு (Sub – Prime Crisis) தனது ஆட்டத்தில் சிறிது சிறிதாக தொய்வு கான ஆரம்பித்தது. வளர்ச்சி காலத்தில் கடன் பெற்று அதிக விலையில் செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் முதலீடுகள் கொள்வாரின்றி முடங்கிப்போயின. இது நிறுவனங்களின் வட்டி சுமையை
                                                                                                          

கூட்டியதோடு, வங்கிகளில் இத்துறையின் வராக்கடன்களின் அளவையும் உயர்த்தி விட்டது. தனியார் பங்குகள் (PE) மற்றும் அந்நிய வர்த்தக்கடன் (OCB) மூலம் பெறப்பட்ட முதலீடுகளும் எதிர்பார்த்த வளர்ச்சியை அதில் முதலீடு செய்தவர்களுக்கு ஏற்படுத்தவில்லை. மேலும் இத்துடன் இணைந்த நமது நாணயத்தின் வீழ்ச்சி நிலைமையை மேலும் சிக்கலாக்கியது ஒரு புறம் வராக்கடன்களின் தேக்க நிலை காரணமாய் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம், பொருளாதார மந்தநிலை காரணமாய் குறைந்து விட்ட வீடு வாங்குவோரின் எண்ணிக்கை மற்றும் அதிக முதலீட்டில் செய்யப்பட சொத்துக்களை குறைந்த விலையில் விற்க தயங்கும் ரியல் எஸ்டேட் நிர்வாகம் ஆகிய மும்முனை தாக்குதல்கள் இத்துறையை மேலும் அதல பாதாளத்திற்கு இட்டு சென்றது.

1) இருண்ட வானில் ஒளிக்கீற்றாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நேரடி அந்நிய முதலீடு பெறும் கட்டுமானத்திட்டத்தின் நிலஅளவு குறைப்பு
(50000 சதுர அடியிலிருந்து  இருந்து 20000 ச.அடி). 2) 100% அந்நிய இந்திய கிளை நிறுவனங்களின் மூலதன அளவு குறைப்பு அளவு (அமெரிக்க டாலர் 10 மில்லியனிருந்து 5 மில்லியனாகச்  செய்தது) 3) ரூ.40 பில்லியன் தொகையை தேசிய வீட்டு வங்கிக்கு ஒதுக்கியது.

4) மொத்த திட்டமதிப்பில் 30% மேலாக மலிவு விலை வீடுகளை ஒதுக்குபவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவு (Built Up area) மற்றும் அந்நிய மூலதன பெறுதல் சில விலக்குகள்:-

5) குடிசை வாரியங்களை மேம்படுத்துதல் (Slum Development) திட்டங்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அதற்கான செலவை தனது சிஎஸ்ஆர்
இநத திட்டத்துடன் இணைத்துக் கொள்ளும் வசதி (பொது நிறுவனங்களின் சமூக கடமைகள்)

6) தனிநபர் வீட்டுக்கடன் வட்டி வரி விலக்கு அதிகரிப்பு (ரூ.1.50 லட்சத்திருந்து ரூ.2.00 லட்சம் வரை) இவை அனைத்தும், இத்துறையை நிமிர்ந்து நிற்கச் செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகவே நாம் கொள்ள வேண்டும். இது தொடர்பான பிற அறிவிப்புகளாகியள அனைவருக்கும் மலிவு விலை வீடு, முதலீடுகளை ஈர்க்கும் புதிய வழிமுறைகள், வங்கிகளில் இத்துறையின் கடனுக்கான சிறப்பு சலுகைகள் ஆகியவற்றை இப்போது பார்ப்போம்.

கட்டுமானத்துறை கடன்கள் பெரும்பாலும் நீண்டகால அடிப்படையிலானவை. பொதுவாக வங்கிகளின் அதிகபட்ச டெபாசிட் காலம் 10 வருடம் மட்டுமே. பெரும்பான்மையான வங்கி டொசிட்கள் 1 முதல் 3 வருட கால அளவை உடையவை. மேற்கூறிய கடன்கள் வங்கிகளை ஒருசமநிலையற்ற (Mis – match) சூழலுக்கு இட்டு செல்ல வழிவகுக்கும். திட்டங்களின் ஆரம்ப கட்டங்களில் பெருமளவு முதலீடு மற்றும் கடன்களை உள்வாங்குவதும், கூடுதலான வருமானத்தை சில ஆண்டுகள் கழித்தே பெறத் தொடங்குவதும், இத்துறையில் உள்ள எதார்த்தம். இது தவிர அரசு அவ்வப்போது எடுக்கும் சில கொள்கை சார்ந்த முடிவுகள், கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றம், தொழிலாளர்கள் இடப்பெயர்வு மற்றும் தகுதி இன்மை போன்ற பிற காரணங்களால், முன்செய்து கொண்ட ஒப்பந்தப்படி திட்டங்கள் முடிக்கப்படாமல் போவதும், வங்கிக்கடனை நிலைக்கு தள்ளுவதும் இத்துறையில் உள்ள சில குறைபாடுகள்.

ரிசர்வ் வங்கியின் தற்போதைய அறிக்கை, வங்கிகள் இக்குறைகளை எதிர்கொள்ளும் விதமாகவும் மற்றும் பயன்பெறும் வகையிலும் அமைந்துள்ளது. இதன்படி மெட்ரோ நகரங்களில் கொடுக்கப்படும் வீட்டுக்கடனின் அளவு ரூ.50 லட்சமாகவும், பிற இடங்களில் கொடுக்கப்படும் ரூ.40 லட்சம் வரையிலான கடன்கள் மலிவு விலை வீட்டுக்கடனாக எடுத்துக் கொள்ளப்படும். (Affordable House).). இது தற்போதைய அளவான ரூ.25,00,000 (மெட்ரோ) மற்றும் ரூ.15,00,000 (பிற நகரங்கள்) விட இரண்டு மடங்கு அதிகம். ஆனால், எக்காரணம் கொண்டும் வீட்டின் மதிப்பு மெட்ரோ நகரங்களில் ரூ.65 லட்சத்திற்கும் பிற நகரங்களில் ரூ.50 லட்சத்திற்கு மிகவும் கூடாது. மலிவு விலை வீடுகளுக்கான இந்த வரையறை பணவீக்கத்தை பொறுத்து சில கால இடைவெளியில் மறுமதிப்பீடு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் இவ்வகையான கடன்களுக்கு, வங்கிகள் பத்திரங்கள் (Bond)) வாயிலாக நிதி (Fund Raising)) பெறுவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இது வங்கிகளின் நிதி பெறும் ஆற்றலை அதிகரிக்கச் செய்வதோடு எதிர்பாராத இடையூறுகள் ஏற்படும்போது அதை எதிர்கொள்ளும் ஆற்றலையும் அளிக்கிறது. வங்கிகள் இதுகானும் சந்தித்து வந்த சவால்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. இவ்வகையான பத்திரங்களின் குறைந்த கால அளவு 7 வருடங்களாகவும், அதற்காக வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டதாகவோ (fixed) அல்லது சந்தை சார்ந்தோ (floating Rate) இருக்கலாம் என்றும், அதை வங்கிகள் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கூடுதல் அம்சமாக டெபாசிட் மற்றும் கடன்களுக்கு உண்டான கட்டுப்பாடுகளான எஸ்.எல்.ஆர். (Statutory liquidity Ratio) ரொக்க கையிருப்பு (Cash Reserve Ratio) மற்றும் முன்னுரிமை பிரிவுக்கான (Priority Sector) கடன் வரையறைகளும் இதற்கு கிடையாது. பத்திரங்கள் மூலமாக பெறப்படும் அனைத்து தொகையும் மேற்குறிப்பிட்ட துறைகளிலேயே முடக்க வேண்டும்.

இதன் காரணமாக இத்துறையின் நீண்ட கால கடன் தேவை பூர்த்தியாவதுடன் அவை தடையின்றி கிடைக்கவும் வழி ஏற்ப்பட்டுள்ளது. இத்தடங்கல்களின் நீக்கம் நிறுவனங்கள் எளிதாக செயல்படவும் மற்றும் திட்டங்களை விரைவாக முடிக்கவும் உதவும். இது மேலும் பல புதிய திட்டங்களை தொடங்குவதற்கு உந்துதலாக அமையும். அதிகப்படியான திட்ட வரவுகள் (Supply) வீடுகளின் விலை குறைப்பிற்கு வழிவகுக்கும். வங்கிகளும் மிஸ்மேட்ச் கவலையின்றி இருக்கலாம். இது தவிர வங்கிகள், இக்கடன்களை ஒரு கால இடைவெளியில் மறு ஆய்வு செய்வதற்கும், தேவைப்பட்டால்  அக்கடனிருந்து விலகிக் கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் இக்கடனில் ஈடுபாடு உள்ள புதிய வங்கிகள் அக்கடனை எடுத்துக் கொள்ளவோ அல்லது பிறவங்கிகளுடன் இணைந்து கொள்ளவோ வசதி உள்ளது. இதை 5/25 அமைப்பு என கூறலாம். அதாவது 25 வருடத்திற்கான ஒரு கடனானது, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்யப்படுவதை இது குறிக்கும்.

மேலும் இப்பத்திரங்கள் அதற்கான சந்தையில் வர்த்தகம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் 7% முதல் 8%வரையிலான அளவு வட்டியையே நீண்டகாலமாக ஈட்டுகின்றன. அரசு கடன் பத்திரங்கள் மூலம் தான் தன் பெரும்பாலான சந்தை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. வட்டி விகிதம் அதிகரிக்கும் பட்சத்தில் அரசின் செலவும், அதன் சமமாக ஏற்றும் காணும். எந்த ஒரு அரசாங்கமும் இம்மாதிரியான ஒரு நிலையை வரவேற்காது. அதனால் பெரும்பாலும் இப்பத்திரங்களின் வட்டி விகிதம் ஒரு சம நிலையிலேயே இருக்கும். இக்கடன் பத்திரங்கள் சந்தையில் வர்த்தகமாகும் போது அதன் காரணமாய் பணப்புழக்கமும் அதிகரிக்கும். இது தவிர வட்டி அதிகரிக்கும் போது (பத்திரங்களின் விலை குறையும்) வங்கிகள் பத்திரங்களை விற்றும் வட்டி குறையும் போது (பத்திரங்கள் விலை ஏற்றும் காணும்) பத்திரங்களை வாங்கியும் தனது கணக்கை (Balance Sheet) நேர் செய்து கொள்ளலாம். இதன் காரணமாய் வங்கிகள், டெவலப்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள்.  தொடர்ச்சியான இச்சூழல் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் கிடைக்க வழி செய்யும். பட்ஜெட், ரிசர்வ் வங்கியின்  நடவடிக்கைகளுக்கு பிறகு மற்றமொரு ஒழுங்குமுறை ஆணையமான செபி ((SEBI) தனது இடைக்கால வரைவு அறிக்கையில் (Draft guidelines)  கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் இறுதி அறிக்கையும் இன்றும் சில வாரங்களில் வெளிவறுவதற்கான
சாத்தியகூறுகள் உள்ளன.

ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (Real Estate Investment Trust) என்ற ஒரு அமைப்பின் தேவையை 2008ம் ஆண்டே பங்கு சந்தை ஒழுங்காணையும் செபி முன் மொழிந்தது. இந்த நடைமுறை வழிகாட்டுதன் படி அக்டோபர் 2014 இருந்து இத்திட்டம் நடைமுறைக்கு வரும். இவை கம்பெனிகளாக செயல்படும் என்றும், அவற்றின் நடவடிக்கைகளாக ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்குவது, விற்பது, நிர்வாகம் செய்வது மற்றும் வாடகை வசூப்பது என செபி அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் மக்களிடமிருந்து முதலீட்டை பெறுவதற்கும் அதற்கு ஈடாக யூனிட்டுகளை வழங்கவும் இது வழிவகை செய்கிறது. ஒரு யூனிட்டின் விலை ரூ.2 லட்சம் என்றும், முதலீடு செய்பவர்கள் குறைந்தது இரண்டு யூனிட்டுகளாவது வாங்க வேண்டும் என செபி நிர்ணயம் செய்துள்ளது. இவ்வகை யூனிட்டுகள் கடன் சந்தையில் (Debt Market) வர்த்தகம் ஆவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வகையான முதலீடுகளுக்கு ஒரு சந்தை செலவாக்கு ஏற்பட வழி உண்டாகிறது.

அறக்கட்டளை, சொத்துக்களை முதலீட்டாளர்களின் சார்பாக நிர்வகிக்கும். இத்தொழில் முனைவோரின் பங்கு எக்கால கட்டத்திலும் 15% அளவிற்கு கீழ் குறையக்கூடாது என்றும், இந்த பங்குகள் (Units) பங்கு சந்தையில் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிர்வாகத்தின் சொத்துக்களை கம்பெனியின் முதன்மை மதிப்பீட்டாளர் 6 மாதத்திற்கு ஒரு முறை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், ஆண்டிற்கு ஒரு முறை 2 வெளி மதிப்பீட்டாளர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

மொத்த வருமானத்தில் செலவு மற்றும் வரி போக மீதமுள்ள லாபத்தில் 90%, அறிக்கை வெளியட்ட 15 நாட்களுக்குள் முதலீட்டாளர்களுக்கு செலுத்தி விட வேண்டும். இவற்றின் வருமானம் பெரும்பாலும் வாடகை, வட்டி, சொத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபம் இவற்றை உள்ளடக்கியே உள்ளது.

முதலீட்டாளர்களுக்கான வருமானம் (Return) சந்தை நிலவரத்தை பொறுத்தே அமையும். பங்கு சந்தையில் வர்த்தகம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதால் நிர்வாகம் மற்றும் முதலீட்டாளர்களை தவிர வேறு பலரும் இதில் ஈடுபட வாய்ப்புண்டு. அது சந்தையின் சூழலுக்கு ஏற்ப விலை மாற்றத்தை உருவாக்கும். முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்க பெறாத பட்சத்தில் எப்போது வேண்டுமென்றாலும் இதிருந்து வெளியேறி விடமுடியும்.

இவ்வகையான அமைப்புகள் இந்தியாவிற்கு புதிது எனினும் உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. உலகில் இவ்வகையான நிறுவனங்கள் / அறக்கட்டளைகளுக்கு எவ்விதமான வரி சலுகைகளோ அல்லது விதி கொள்கை தளர்வுகளோ கிடையாது. ஆனால் செபி இதில் தன் கொள்கையை சற்று தளர்த்தி இந்நிறுவனங்களின் சொத்து மதிப்பில் 50% வரை பிறவகைகளில் நிதியை திரட்டலாம் என அறிவித்துள்ளது (Leverage) தற்போது ரூ.60,000 கோடி அளவிலான வீட்டுச் சொத்துக்கள் விற்பனையின்றி தேங்கி கிடக்கின்றன. இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வரும் பொழுது அதை தனி முதலீட்டாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் பெரிய அளவில் வரவேற்பார்கள் என்பதில் எவ்வித அய்யமுமில்லை. உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் மோர்ட்கேஜ் சந்தை அதன் உள்நாட்டு உற்பத்தியில் 8% அளவே உள்ளது. இதுவே சில வளர்ந்த நாடுகளில் 80% வரை உள்ளது. அரசும் பங்கு சந்தையை போல, பத்திர / கடன் சந்தைகளை மேலும் விரிவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அயல் நாட்டு முதலீடுகள் ரியல் எஸ்டேட் துறையில் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் வரிச்சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள் வரும் காலங்க ளில் நீக்கப்படும் போது இது ஒரு பெரிய சந்தையாக வளர வாய்ப்புகள் உள்ளன.

இது நடைமுறையில் தற்போது இருக்கும் சிக்கல்களான நீண்ட கால தேவைக்கு ஏற்ப, சரியான நேரத்தில், சரியான விலையில் நிதி கிடைக்காமை (டெவலப்பர்ஸ்), வங்கிகளுக்கு நீண்ட கால அடிப்படையிலான கடன் கொடுப்பதி,ல் உள்ள சிக்கல் மற்றும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கபெறாமை போன்ற குறைபாடுகளை பெருமளவு கழையும். பங்கு சந்தையில் வர்த்தகம், செய்யும் வாய்ப்பு குறுகிய கால பணமுடைகளை பெரிதும் களையும். வங்கிகளின் உதவி, பங்கு சந்தை வர்த்தகம், இத்தொழிலை மேலும் வளமாக்குவதுடன், சரியான விலையில் வீடுகள் என்ற இந்திய குடும்பங்களின் கனவை நிறைவேற்றும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. அனைவரையும் போல நாமும் இந்த முயற்சி வெற்றி பெறும் என நம்புவோம் கனவு மெய்ப்படட்டும்.

Leave a Reply