ரியல் எஸ்டேட்: தமிழகத்துக்கு வருமா ஒழுங்குமுறைச் சட்டம்?

1_1997010g

மவுலிவாக்கம் கட்டிட விபத்து கட்டுமானத் துறையையும் தாண்டி மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இது ரியல் எஸ்டேட் தொழில் மீதும், அது தொடர்பான சட்டங்களின் மீதும் பார்வையைத் திருப்பியிருக்கிறது. இந்த வேளையில் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய மசோதா பாணியில் தமிழகத்தில் ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதா என்ன சொல்கிறது? ‘இந்த மசோதாவில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் திட்டங்களுக்கான நிலம் தொடர்பான விவரங்களைப் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். பணிகள் முடியும் நாள், திட்டங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீதான புகார்கள் உட்பட இத்துறையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களிடம் பணத்தை வசூலித்து விட்டு, கட்டுமானப் பணிகளை முடிக்காமல், திட்டங்களைப் பாதியில் நிறுத்தும் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து, பணம் வட்டியுடன் வசூலிக்கப்படும். முதலீட்டாளர்களை ஏமாற்றும் கட்டுமான நிறுவனத்துக்கு, அபராதத்துடன் சிறை தண்டனையும் வழங்க முடியும்’ என இந்த மசோதா கூறுகிறது. இந்த மசோதாவுக்கு சில மாநில அரசுகள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன. இருந்தாலும் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. மக்களவையில் நிறைவேற்றப் படாததால், இன்னும் சட்டமாக வில்லை.

இந்நிலையில் புதிதாகப் பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்தச் சட்டத்தை மறு ஆய்வு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதேபோன்ற ஒரு சட்ட மசோதாவை மகாராஷ்டிர மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்களைக் கண்காணிக்கும் பணியைச் செய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் இந்த வழிமுறையை தமிழகமும் பின்பற்ற வேண்டும் என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், ரியல் எஸ்டேட் தொடர்பாக நூல்கள் வெளியிட்டுள்ள வருமான ஷ்யாம் சுந்தர்.

2_1997011g

“மத்திய அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய மசோதாவில் அப்ரூவல்லைக் காட்ட வேண்டும், திட்டத்திற்கு வாடிக்கையாளரிடம் முன் பணமாக 20 சதவீதத்திற்கு மேல் வாங்கக் கூடாது, வீடு கட்டும் திட்டத்திற்காகப் பெறப்படும் பணத்தை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது எனப் பல ஷரத்துகள் உள்ளன. ஆனாலும் இந்த மசோதா கிடப்பில் இருப்பதால் பில்டர்களைக் கண்காணிக்க முடியாத நிலையே உள்ளது.

மகாராஷ்டிர அரசு மகாராஷ்டிர மாநில ஒழுங்குமுறை ஆணைய மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளது. இதன்மூலம் அங்கு ஒரு பில்டர் கட்டுமானத் திட்டம் குறித்து விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றால்கூட ஒழுங்குமுறை ஆணையத்திடம் எல்லா அப்ரூல்வல்களையும் வழங்கி அனுமதி பெற்ற பிறகே விளம்பரம் கொடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையிலும் மகாராஷ்டிரா போல ஒரு மசோதாவைக் கொண்டு வர வேண்டும்.

இதில் மவுலிவாக்கம் விபத்தைக் கருத்தில் கொண்டு கட்டிடங்கள் கட்டுவதற்கான விதிமுறைகளையும் சேர்க்க வேண்டும். மண் பரிசோதனை, மண்ணுக்கு ஏற்ப எவ்வளவு அடியில் அஸ்திவாரம் போட வேண்டும், அதற்கான விதிமுறைகள் ஆகியவற்றைச் சேர்த்து சட்டம் கொண்டு வந்தால், இத்தொழிலை அரசு முழுமையாகக் கண்காணிக்க வாய்ப்பு ஏற்படும்’’ என்கிறார் ஷ்யாம் சுந்தர்.

Leave a Reply