சென்னைப் புறநகரில் வீடு வாங்கியவர்கள் ஒரு மாதத்துக்குள் இரண்டு முறை வெள்ளப் பாதிப்பைச் சந்தித்து முடங்கிப்போய் கிடக்கிறார்கள். ஆசை ஆசையாக வாங்கிய வீட்டை நவம்பர் 15, 16 தேதிகளிலும், டிசம்பர் 1, 2 தேதிகளிலும் வெள்ளம் முற்றுகையிட இப்போது செய்வதறியாமல் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.
புறநகர்ப் பகுதிகளில் கழிவு நீர் வடிகால், பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால், குடிநீர் வசதி, சாலை வசதி என எந்த வசதி இல்லாமல் இருந்தாலும் சொந்த வீட்டில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் பலரும் இருந்தார்கள். ஆனால், புறநகர்ப் பகுதியில் தொடர்ந்து தேங்கிய வெள்ளம் புதிதாக வீடு வாங்க உத்தேசித்துள்ளவர்களை யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாகக் கழிவு நீர் வடிகால் வசதி, மழை நீர் வடிகால் வசதி இல்லாத புறநகர்ப் பகுதிகளில் மக்கள் இனி வீடு வாங்குவார்களா எனக் கேள்வி எழுந்துள்ளது.
சென்னைப் புறநகரில் இரண்டு முறை வெள்ளம் வந்தது மட்டுமல்ல, வந்த வெள்ள நீர் 10 நாட்களுக்கும் மேலேயும் தேங்கி நின்றது. இதனால் புறநகர்ப் பகுதிகளில் வாடகை வீட்டில் இருப்பவர்கள், வேறு இடங்களில் வாடகை வீட்டைத் தேடும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால், வீட்டுக் கடன் வாங்கி சொந்த வீடு வாங்கியவர்கள் இப்படி எளிதாக வீட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. உடனடியாக இல்லாவிட்டாலும், சில மாதங்கள் கழித்து வீடுகளை விற்றுவிட்டுப் போக முடிவு செய்யலாம். வெள்ளம் தேங்கிய பகுதியாக இருந்தாலோ அல்லது வடிகால் வசதி இல்லாத பகுதியாக இருந்தாலோ வீட்டை விற்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. ஏனென்றால் வெள்ளம் ஏற்படுத்திய தாக்கம் அப்படியானது.
பாதாளச் சாக்கடை வசதி, மழைநீர் வடிகால் வசதி, கழிவு நீர் வடிகால் வசதிகளைக் கொண்ட, சென்னை மாநகரின் பழைய பகுதிகளிலும் கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், அந்தப் பகுதிகளில், ஓரிரு நாட்களில் வெள்ள நீர் வடிந்து சகஜ நிலை திரும்பிவிட்டது. ஆனால், மழைநீர் வடிகால், பாதாளச் சாக்கடை வசதிகள் இல்லாத சென்னை மாநகரின் விரிவாக்கப் பகுதிகள், மாநகராட்சி எல்லையை ஒட்டிய நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் நிமைமை மிக மோசம். பல இடங்களில் 10 நாட்களைத் தாண்டியும்கூட வெள்ள நீர் வடியவில்லை.
இந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து மழைநீர் வெளியேற எந்த வடிகால் வசதியும் இல்லை என்பதுதான் உண்மை. கழிவு நீரை வெளியேற்றப் பாதாளச் சாக்கடை வசதி இல்லை. எனவே வெள்ள நீரும், கழிவு நீரும் கலந்து பல புறநகர்ப் பகுதிகள் தொற்றுநோய் அபாயத்தில் உள்ளன. வெள்ள நீர் வடிவதில் சிக்கல் இருப்பதால் வீடு வாங்கியவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாகவே வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீடுகளைக் காலி செய்கிறார்கள். தற்போது வந்த விலைக்கு வீட்டை விற்கவும்கூடத் தயாராக இருந்தாலும் வீடு விற்பனையாகுமா எனக் கவலையில் உள்ளனர்.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முடிச்சூரைச் சேர்ந்த பாலமுருகன் நம்மிடம் பேசினார். “முடிச்சூரில் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன். இரண்டு முறை கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால் வீட்டை விற்கச் சொல்லி உறவினர்கள் வற்புறுத்துகிறார்கள். சரி, வீட்டை விற்றுவிடலாம் என எண்ணி ஆன்லைனில் வீட்டை விற்கப் பதிவு செய்தேன். ஆனால், வீட்டை விலைக்குக் கேட்டு சொல்லிக்கொள்ளும்படி அழைப்புகள் வரவில்லை. வந்த ஓரிரு அழைப்புகளில் பேசியவர்களும் வீட்டை அடிமாட்டு விலைக்குக் கேட்கிறார்கள். எனவே இப்போதைக்கு வீட்டை விற்கும் முடிவை கைவிட்டு விட்டேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
வாங்கிய வீட்டை விற்பதிலேயே இவ்வளவு பிரச்சினை என்றால், புற நகர்ப் பகுதிகளில் வானாளாவிய அடுக்குமாடி வீடுகளைக் கட்டி விற்கும் கட்டுமான நிறுவனங்களின் நிலைமை இன்னும் மோசம். இந்த வெள்ளம் ரியல் எஸ்டேட் தொழிலில் மந்த நிலையையும், கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள். இதன் காரணமாகப் புறநகரில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கட்டி முடித்த வீடுகளை வாங்க ஆள் இல்லாமல் பல வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. இந்நிலையில் மழை, வெள்ளப் பாதிப்புக் காரணமாக வீடுகள் விற்பனை முற்றிலும் சரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் மழை நீர் வடிகால், கழிவு நீர் வடிகால் வசதியை ஏற்படுத்தாத வரை வீடு வாங்க மக்கள் யோசிக்கவே செய்வார்கள் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள்.
வெள்ளத்தால் ரியல் எஸ்டேட்டுக்குப் பாதிப்பில்லை!
வெள்ளத்தால் ரியல் எஸ்டேட் துறைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று இந்திய கட்டுநர் சங்கத்தின் சென்னைப் புறநகர் கிளை முன்னாள் தலைவர் ரகுநாத்திடம் கேட்டோம். “வெள்ளத்துக்கும் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்போதும்கூட நங்கநல்லூர், மடிப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் சந்தை நிலவரம் சிறப்பாகவே உள்ளது. இந்தப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டே செல்கிறது.
விலை உயர்வு காரணமாக ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, முடிச்சூர் போன்ற இடங்களில் நிலம் வாங்கி கட்டிடம் கட்டியவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான். புறநகர்ப் பகுதிகளில் மழை நீர் வடிகால் இல்லாததால் வீடு வாங்குவது குறையும் என்பது தவறானதுதான். ஏரிகள் நிரம்பியதாலும், ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பாலும், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மழை பெய்ததுமே வெள்ளம் வரக் காரணம். அப்படி வந்த வெள்ளம்கூட உடனே வடிந்துவிட்டது.
கட்டுநர்கள் ஏரி, குளங்களை ஆக்கிரமித்துக் கட்டியுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டும் தவறானது. கட்டுமானத் தொழில்தான் எங்கள் ஆதாரம். கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டுமானத் திட்டங்களைச் செய்கிறோம். ஏரி புறம்போக்கு, குளத்து புறம்போக்கு நிலத்தை வாங்கியா வீடு கட்டுவோம்.
நாங்கள் வாங்கும் நிலத்துக்கு பட்டா இருந்தால்கூட அந்த இடத்தின் 50 ஆண்டுகால ஆவணங்களையும் சரிபார்த்த பிறகே வாங்குவோம். நீர்நிலை புறம்போக்கு என்று தெரியவந்தால் எங்கள் சங்கத்தில் யாரும் வாங்கவே மாட்டார்கள். அப்படிச் செய்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியாதா?” என்கிறார் ரகுநாத்