சசிகலாபுஷ்பாவில் விழுந்த முதல் விக்கெட். பால்வளத்துறை அமைச்சரின் முக்கிய பதவி பறிப்பு
திருச்சி சிவாவுடன் மோதலில் ஆரம்பித்த சசிகலாபுஷ்பா தற்போது அதிமுக தலைமையுடன் மோதி வருகிறார். அவர் மட்டுமின்றி அவருக்கு நெருக்கமானவர்களின் பதவிக்கும் விரைவில் ஆபத்து வரும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது முதல் விக்கெட்டாக பால்வளத்துறை அமைச்சர் சண்முகநாதனின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருச்சி மாநகர மாவட்ட செயலாளராக இருந்த மனோகரனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் புதிய மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக பி.வி.ரமணா இருந்த நிலையில் அவர் ஆபாச வாட்ஸ்அப் விவகாரத்தில் சிக்கியதால் அவருடைய பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகி|றது.
இதன் பிறகு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை வாலாஜாபாத் கணேசன் கவனித்து வந்தார். மீண்டும் ரமணாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நினைத்து வந்த நிலையில், கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த சிறுனியம் பலராமன் எம்.எல்.ஏ-வை மேற்கு மாவட்ட செயலாளராக நியமித்திருக்கிறார் ஜெயலலிதா.
இதற்காக, கிழக்கு மாவட்டத்தில் இருந்த பொன்னேரி தொகுதி மேற்கு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் ஓபிஎஸ் ஆதரவாளரான அலெக்சாண்டர் எம்எல்ஏ-வை ஜெயலலிதா நியமித்துள்ளார். இது ரமணா தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.