கல்லீரல் செயலிழப்பு காரணம் என்ன?
“மது அருந்தினால் கல்லீரல் செயலிழக்கும் என்பது தெரியும்…ஆனால் ஒரு தவறும் செய்யாத சின்னக்குழந்தைக்கு கல்லீரல் செயலிழக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகிறது இதற்கு என்ன காரணம்? என்னதான் தீர்வு? இதுகுறித்து பார்ப்போம்
மனிதனுக்குள்ளே இருக்கும் ஓர் அற்புதமான தொழிற்சாலை கல்லீரல். மனிதர்களின் ஒவ்வோர் உறுப்புக்கும் தேவையான சத்துக்களை உணவில் இருந்து உறிஞ்சுவது, தேக்கிவைப்பது, நச்சுக்களை வெளியேற்றுவது எனப் பல பணிகளைச் செய்துவரும் கல்லீரல், ஒரு நாள் ஸ்ட்ரைக் செய்தாலும் மிகப்பெரிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். உடனடி கல்லீரல் செயலிழப்பு (Acute Liver Failure), நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு (Chronic Liver Failure) என இரண்டு வகையான கல்லீரல் செயலிழப்புகள் உள்ளன.
ஆல்கஹால் அருந்துவதால் கல்லீரல் பாதிப்பது, அதிக அளவு கொழுப்பு படிந்து ஃபேட்டி லிவர் பிரச்னையால் கல்லீரல் சுருக்கம் அடைவது போன்றவை நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு வகைக்குள் அடங்கும். இவர்களுக்கு, மெள்ள மெள்ள கல்லீரல் பாதிக்கப்பட்டு, 10 – 15 ஆண்டுகள் கழித்து முழுமையான கல்லீரல் செயலிழப்பு ஏற்படும். மிகச்சிலருக்கு, திடீரென மஞ்சள்காமாலை போன்ற ஏதாவது கோளாறு ஏற்பட்டு, ஒரு வாரம் முதல் ஒரு மாதத்துக்கு உள்ளேயே கல்லீரல் செயலிழந்துவிடும். இதைத்தான் ‘உடனடி கல்லீரல் செயலிழப்பு’ என்கிறோம்.
இது எந்த வயதிலும் நடக்கலாம். எனினும், குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மஞ்சள்காமாலை என்பது ஒரு நோய் கிடையாது; அது ஒரு பாதிப்பின் அறிகுறி. கல்லீரலில் ஏதோ பிரச்னை என்பதால் மஞ்சள்காமாலை வருகிறது என்பதை உணர்ந்து, எந்த நோயின் பாதிப்பு இருக்கிறதோ, அதை அறிந்து, அதற்கான சிகிச்சை எடுத்தாலே, பிரச்னையைத் தவிர்த்துவிடலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் உடனடி கல்லீரல் செயலிழப்பு பிரச்னையின் முக்கிய அறிகுறி மஞ்சள்காமாலை தான்.
பொதுவாகவே, குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. ஹெபடைட்டிஸ் ஏ, இ ஆகிய வைரஸ்கள் காரணமாக மஞ்சள்காமாலை ஏற்பட்டால், இரண்டு மூன்று நாட்களில் தானாகவே சரியாகிவிடும். மூன்று நாட்களைத் தாண்டியும் காமாலை இருக்கிறது எனில், உடனடிக் கவனம் தேவை. நமது கல்லீரல் 50 சதவிகிதம் வரை பாதிக்கப்படும்போது, நமக்கு எந்த வித அறிகுறியும் தெரியாது, நன்றாகவே இயங்குவோம்.
50 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்படும்போதுதான், மஞ்சள்காமாலையின் வீரியம் அதிகமாகும். ஹெபடைட்டிஸ் வைரஸ் தாக்காமல் மஞ்சள்காமாலை வருகிறது எனில், எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
ரத்தம் உறையத் தேவையான பொருளை உற்பத்தி செய்வது, நச்சுக்களை நீக்குவது, சில சத்துக்கள் கிரகிப்பதற்கான என்சைம்களை உற்பத்திசெய்வது போன்ற பணிகளை கல்லீரல் செய்கிறது. கல்லீரலில் நச்சுக்களை வெளியேற்றுவதற்கான என்சைம்கள் தானாகவே சுரக்கும், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் நச்சுக்களை கல்லீரல் டீடாக்ஸ் செய்துவிடும். கல்லீரலில் நச்சுக்கள் வெளியேற்றும் என்சைம்கள் ஒழுங்காகச் சுரக்கவில்லை எனில், உடலில் நச்சுக்கள் தேங்கி, கல்லீரல் பாதிக்கப்படும். 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் சேர்ந்தக் கூட்டுக்கலவைதான் புரதச்சத்து. புரதச்சத்தை உடைத்து, உடலுக்கு ஏற்ற வகையில் மாற்றும்போது வெளிப்படும் பொருள் அமோனியா. இந்த அமோனியாவை கல்லீரலே யூரியாவாக மாற்றி, சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும்.
அமோனியாவை யூரியாவாக மாற்றும் என்சைம்கள் கல்லீரலில் உற்பத்தி ஆகவில்லை எனில், உடலில் அமோனியா தேங்கிவிடும். அம்மோனியா அதிகம் சேர்ந்தால், அது நச்சாக மாறி கல்லீரலையே சிதைத்துவிடும். மூளைக்கு ஆக்சிஜன் சரியாகச் செல்லாமல், மூளையில் வீக்கம், கட்டி ஆகியவை ஏற்பட்டு மரணம் ஏற்படும்.
ஒரு சில குழந்தைகளுக்கு அமோனியா பாதிப்பால் மஞ்சள்காமாலை வராமல் நேரடியாக வலிப்பு வரக்கூடும். குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வந்து, தொடர்ந்து உடல் பலவீனம் அடைந்துவந்தால், அமோனியா பரிசோதனை செய்வது அவசியம். ரத்தத்தில் அமோனியா எவ்வளவு இருக்கிறது என்பதை ரத்தப் பரிசோதனை மூலம் அறியலாம். பொதுவாக, ஒருவருக்கு 60 மைக்ரோ மோல் அளவுக்குத்தான் அமோனியா ரத்தத்தில் இருக்க வேண்டும். ஆனால், உடனடி கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கு, 1,500 மைக்ரோ மோல் அளவைவிடவும் அதிகமாக இருக்கும்.
வளர்சிதை மாற்றக் கோளாறுகள் காரணமாக, என்சைம்கள் சுரப்புக் குறைபாடு ஏற்படும் குழந்தைகளுக்கு கல்லீரல் செயலிழப்பு அதிகமாக நடைபெறுகிறது. ஒரு சில குழந்தைகளுக்குத் தாய்ப்பாலில் இருக்கும் கேலக்டோஸ் செரிக்கும் தன்மை இல்லாமல்போவதால், தாய்ப்பாலே விஷமாகும். இதுபோன்ற சமயங்களில் உடனடியாகக் கண்டுபிடித்தால் சிகிச்சை எளிது. எந்த மருந்து, மாத்திரையும் தேவை இல்லை, கேலக்டோஸ் சர்க்கரை இல்லாத உணவுகளை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தாலே, பிரச்னை சரியாகிவிடும்.
இந்தியாவில் வில்சன் நோய் பிரபலம். இந்தியர்களில் பலருக்கு தாமிரச்சத்தை வெளியேற்றும் என்சைம்கள் ஒழுங்காகச் சுரக்காமல்போவதால், இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. வில்சன் பிரச்னை இருப்பவர்களுக்கும் கல்லீரல் செயலிழப்பு அபாயம் அதிகம். வில்சன் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரை, மருந்துகள் மூலமே உடலில் இருந்து தாமிரத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிட முடியும். உடனடி கல்லீரல் செயலிழப்பைப் பொறுத்தவரையில் துரிதமாகச் செயல்பட்டு நோயைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதுதான் முக்கியம். எனவே, குழந்தைகளுக்கு ரத்தவாந்தி, நினைவு தப்புதல், மஞ்சள்காமாலை போன்றவை ஏற்பட்டால், சுய மருத்துவம் செய்து நேரத்தை வீணடிக்காமல், மருத்துவமனைக்குச் செல்வதுதான் சிறந்தது.
ஹெபடைடிஸ் ஏ, இ தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது, பரம்பரை வழி சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பதன் மூலம், பெரும்பாலும் உடனடி கல்லீரல் செயலிழப்பு நோயைத் தடுக்க முடியும்!