மார்ச் 12 – உலக சிறுநீரக நாள்
சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் முன்பைவிடத் தற்போது அதிகரித்துவிட்டன. இதற்கு நம் வாழ்க்கைமுறைதான் முதன்மைக் காரணம். அதிலும் தற்காலத்தில், பலரும் அவதிப்படுவது சிறுநீரகத்தில் கல் உருவாகும் பிரச்சினையால்தான்.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியைத் தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று. மிகச் சிறிய படிவங்கள் தேங்கி, கற்களாக உருவாகிச் சிறுநீரகத்தில் தங்கிவிடுகின்றன. இது வலியை ஏற்படுத்தாதவரை யாரும் இதைக் கண்டுபிடிப்பது இல்லை.
சிறுநீரகத்தில் கல் இருந்து, அது சிறுநீர்ப் பாதை வழியாக நகர்ந்து வெளியேறும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. இது சிறுநீர்க் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான், வலி கடுமையாகும். பெரும்பாலும் சிறிய கற்கள் சிறுநீரில் வெளியேறிவிடும். அது வலி, எரிச்சலைத் தருவதில்லை என்பதால் யாரும் இதை உணர்வதே இல்லை. சிறுநீரில் வெளியேற முடியாத பெரிய கற்கள்தான் வலியை ஏற்படுத்துகின்றன.
கண்டுபிடிக்கும் முறைகள்
பொதுவாகவே சிறுநீரகக் கல் உருவாகும் நபருக்கு ஆரம்ப நாளில் எரிச்சல் ஏற்படும். இதுதான் தொடக்கக் கால அறிகுறி. இந்த நேரத்தில் சிறுநீரின் நிறமும் மாறும். அடிக்கடி காய்ச்சல், குளிர் காய்ச்சல் வரலாம். அத்துடன் உணவு செரிக்கும்போது அதிகப்படியான எரிச்சல் ஏற்படுகிறதா என்று கவனிக்க வேண்டும்.
இந்த நேரத்தில் வெளியேறும் சிறுநீரின் நெடி, ஆட்டு சிறுநீர் போலக் கெட்ட நெடி வீசும். இவையெல்லாம் சிறுநீரகத்தில் கல் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள்.
இந்த அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், சிகிச்சை எளிதாகும்.நோய் தீவிரமடைவதைத் தடுக்க முடியும். சிறுநீரகக் கல்லால் முதுகுப் பகுதியில், அடி வயிற்றில் ஏற்படும் அபரிமிதமான வலியைத் தவிர்க்க முடியும்.
கல் உருவாவது எப்படி?
சிறுநீரின் செயல்பாடு என்பதே உடலிலிருந்து கிலேதம் வெளியேறுவதைக் குறிப்பது. கிலேதம் என்பது உணவு செரிமானத்துக்குப் பிறகு மெல்லிய திரவ வடிவில் வெளியேறுவதாகும். உடலின் பல்வேறு திசுக்களில் சிறிய அளவில் கிலேதம் படிகிறது. இவைதான் பல நேரம் சிறுநீரில் வெளியேறுகிறது.
இருந்தாலும் பல நேரம் கிலேதம் படிமமாக உடலில் படிந்துவிடும், பானையில் கீழ்ப் பகுதியில் கசடு படிவதைப் போல. இவ்விதம் படிவதுதான் சிறுநீரகத்தில் கல்லாக உருவாகிறது. ஆயுர்வேதத்தில் சிறுநீரகக் கற்கள் அஷ்மாரி என்றும், சிறிய துகள்கள் சர்க்கரா என்றும் குறிப்பிடப்படுகின்றன.
தோஷங்களும் கிட்னி கல் உருவாதலும்
இயற்கையில் காற்று, வெப்பச் சூழலில் மழைநீர் பட்டு நாளடைவில் பாறையாக மாறுவதைப் போல, நமது உடலில் உள்ள தோஷங்களில் ஒன்றான கபம் காரணமாகக் கற்கள் உருவாகின்றன. உடலில் பித்தம் காரணமாகச் சூடு ஏற்படுகிறது. வாதம் காற்றைப் போன்றது.
சிறுநீர்த் தொற்றுக்கு ஆளானவர்கள் உணவுப் பழக்கத்திலும் குறிப்பாகத் திரவ உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுச் சிறுநீரகக் கல் உருவாவதற்கான வாய்ப்பு மிக அதிகம். உடலில் உள்ள தோஷங்கள் பாதிக்கப்படும்போது சிறுநீரகத்தில் கல் உருவாகிறது.
உணவுப் பழக்கம்
பொதுவாக அதிக மசாலா சேர்த்த உணவு, புளிப்பு சுவை, செரிமானத்துக்குச் சிரமப்படும் அளவுக்குச் சாப்பிடுவது, இறைச்சி, முட்டை சார்ந்த பொருட்களை அதிகம் சாப்பிடுவது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது ஆகியவை சிறுநீரகக் கல் தோன்றுவதற்கு முக்கியக் காரணங்கள்.
பொரித்த உணவு வகைகள் கபம் என்னும் கிலேதத்தை உருவாக்கும். கோடைக் காலத்தில் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக் கூடாது.
ஆயுர்வேதத்தில் அஷ்மாரி (சிறுநீரகக் கல்) நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை வடஜா, பிட்டஜா, கபஜா, சுக்ரஜா.
பித்த உடல் வாகு
பித்த உடல் வாகு உள்ளவர்களுக்குச் சிறுநீரகக் கல் உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. சிறுநீரகக் கல் உருவாகிப் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் பித்த உடல் வாகு கொண்டவர்களாக உள்ளனர். அதிகமாக வியர்வை வெளியேறுபவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம். பித்த உடல் வாகு உடையவர்கள் குளிர்ச்சியான சூழலில், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. அல்லது அதிகமான வெளி வெப்பநிலை நிலவும்போது வியர்வை வெளியேறியும் சிறுநீரகக் கல் உருவாகலாம்.
நமது வாழ்க்கை முறை (மூத்ர வேதகர்ணம்) காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படலாம். அல்லது உரிய நேரத்தில் சிறுநீர் கழிக்காமல் சிறுநீர் பையில் அதிக நேரம் தங்கினாலும் கல் உருவாகும். அதிக உடலுறவு அல்லது தடைபட்ட உடலுறவு போன்றவற்றால் மன உளைச்சல் ஏற்பட்டு அதனாலும் கல் ஏற்படலாம்.
வெப்பச் சூழலில் பணி
அதிகப்படியான நேரம் மின்னணுப் பொருட்கள் மத்தியில் பணிபுரிவது மற்றும் அதிக வெப்பம் வெளியிடப்படும் பகுதியில் நீண்ட நேரம் பணிபுரிவது, குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் பணிபுரிவது போன்றவையும் சிறுநீரகக் கல் உருவாக வழிவகுக்கும். சுற்றுச்சூழல் சீர்கேடும் இதில் முக்கியக் பங்கு வகிக்கிறது. அதிக வெப்பமான பகுதி, கனநீர் அல்லது நீரில் பாஸ்பரஸ் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்குச் சிறுநீரகக் கல் உருவாக வாய்ப்புள்ளது.
நோய்த் தடுப்பு பரிந்துரைகள்
சிறிது எச்சரிக்கையோடு இருப்பதன் மூலம் சிறுநீரகக் கல் உருவாவதை முன்கூட்டியே தடுக்கலாம். எந்த உணவைச் சாப்பிட்டாலும் நன்கு தண்ணீர் குடிக்க வேண்டும். இளம் சூட்டில் உள்ள நீர், குளிர்நீரைவிட நல்லது.
ஈரப்பதம் அதிகமுள்ள உணவு வகைகள், நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிடுவது சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்க உதவும். நார்ச்சத்து மிக்க உணவு வகைகள், பழங்களை அதிகம் உட்கொள்ளலாம். குறைந்த அளவு மசாலா, மிளகாய் சேர்க்கப்பட்ட உணவை உட்கொள்வதன் மூலம் உடல் அதிக வெப்பமாவதைத் தடுக்கலாம். நல்லெண்ணெயும் ஆலிவ் எண்ணெயும் உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
சாதாரண உப்புக்குப் பதிலாக ரா சால்ட் எனப்படும் இந்துப்பைப் பயன்படுத்துவது நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.
மேற்கண்ட விஷயங்கள் உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கவும் சிறுநீர் சீராக வெளியேறவும் உதவும். இதன்மூலம் சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
ஆயுர்வேத அணுகுமுறை
சிறுநீரகக் கல்லின் அளவு 3 மில்லி மீட்டருக்குக் குறைவாக இருந்தால் ஆயுர்வேத சிகிச்சை முறையில் எளிதாகக் குணப்படுத்த முடியும். அது மீண்டும் உருவாகாமலும் தடுக்க முடியும். சிறுநீரகக் கல் உருவாகியிருப்பதை நோயாளியின் நடவடிக்கைகள் மூலம் கண்டறிந்துவிடலாம்.
3 மில்லி மீட்டருக்கு மேல் கற்கள் உருவாகியிருந்தால், ஆயுர்வேத முறையில் குணப்படுத்த அதிக நாளாகும். அதேநேரம் இந்த நோய் திரும்ப உருவாகாமல் இருப்பதற் கான வழிமுறைகள் ஆயுர்வேத சிகிச்சையில் உள்ளன. ஏற்கெனவே, அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், லித்தோடிரிப்சி செய்துகொண்டவர்களுக்கு மீண்டும் சிறுநீரகக் கல் உருவாகாமல் ஆயுர்வேத சிகிச்சை முறையால் தடுக்க முடியும். பொதுவாக சிகிச்சை காலம் 7 நாட்கள் முதல் 21 நாட்கள்வரை.
சிறுநீரகக் கல் கரையுமா?
பொதுவாக உடலில் உள்ள தோஷங்களை ஆராய்ந்த பிறகுதான் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிறுநீரகக் கல் கரையப் பொதுவாக அளிக்கப்படும் சிகிச்சைகள்:
ஸ்னேஹனா – உயவு சிகிச்சை: இந்த சிகிச்சையில் உள்ளுக்கும் வெளிப்புறத்துக்கும் மருந்து தரப்படுகிறது. இதன்மூலம் சிறுநீர்ப் பாதை சீரடைந்து தசைகள் விரிவடைந்து சிறுநீர் வெளியேற வழி ஏற்படும். கல்லும் கரைந்து வெளியேறிவிடும். உரிய வகை மசாஜ் மூலம் வாதச் செயல்பாடு சீராக்கப்படுகிறது.
ஸ்வேதனா – ஒத்தட சிகிச்சை: வஸ்தி மற்றும் மருத்துவ எனிமா. மருத்துவ குணம் பொருந்திய எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் ரத்த நாளங்களுக்குள் சென்று விரைவாகச் செயல்படுகிறது.
உத்தர வஸ்தி – மருத்துவத் தெரபி: பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருந்துகள் செல்லும் வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விரேசனா – மருந்து மூலம் தூய்மை செய்தல்: உடலில் உள்ள அனைத்துச் செல்களையும் இது சுத்தம் செய்கிறது. உடலில் உள்ள தேவையற்ற பொருட்கள், செல்கள், கற்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். வலி, எரிச்சலின்றிக் கற்கள் வெளியேறிவிடும்.
சிறப்பு உணவு
இந்த நோய்க்கு உரிய உணவு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் சிறுநீர் அதிகம் வெளியேற வழி ஏற்படும். அத்துடன் எரிச்சல் குறையும், அதிகப்படியாகத் தங்கியுள்ள கிலேதமும் வெளியேறும். தசைகள் வலுவிழக்காமல் வைத்திருக்கவும் உடல் வெப்பநிலையைச் (பித்தம்) சீராகப் பராமரிக்கவும் உதவும்.
மாதுளை, சப்போட்டா, பெருநெல்லி, கறுப்பு திராட்சை, உலர் கறுப்பு திராட்சை, அனைத்துச் சிட்ரஸ் வகைப் பழங்கள் உதவியாக இருக்கும். கொள்ளு சாப்பிடுவதும் நல்லது. பழங்களை வேகவைத்த தண்ணீர் சாப்பிடுவது, நெருஞ்சி முள், முக்குராட்டை கீரை, பார்லி தண்ணீர் குடிப்பது உதவியாக இருக்கும். முருங்கை வேர் கஷாயம் மற்றும் ஆரோட் கஞ்சி ஆகியன பயனளிக்கும்.
இளநீருடன் (200 மி.லி.) சிறிது ஏலக்காய் சேர்த்துத் தினசரிக் குடித்துவந்தால் கல் கரையும். பெருநெல்லி சாற்றைத் தேனுடன் சேர்த்துத் தினசரிக் காலை சாப்பிட்டால் பயன் கிடைக்கும். சின்ன வெங்காயத்தின் சாற்றுடன் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.
வயிற்றுப் பகுதிக்குச் சிறிது வேலை தரும் வகையிலான பயிற்சிகள் மற்றும் வயிற்றுப் பகுதிக்கு மசாஜ் செய்வது ஆகியவை நோயாளிக்கு இதமளிக்கும். வாதத்தைச் சீராக்கவும் இது உதவும். மேற்கண்ட அம்சங்கள் சிறுநீரகக் கல்லை உடைத்து, அவை சிறுநீரில் வெளியேற வழி ஏற்படுத்தும்.