ரூபாய் நோட்டு விவகாரத்தில் மறு ஆய்வு. பிரதமர் மோடி அதிரடி
ரூபாய் நோட்டு விவகாரம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் இந்த விஷயத்தில் மிக விரைவில் மறு ஆய்வு செய்வேன் என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.
உ.பி சட்டமன்றா தேதல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் சில சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். உங்களின் தியாகம் வீண்போகாது. நமது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இன்னும் 50 நாட்களில் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
அரசின் நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாற உள்ளது. சிட்பண்ட் ஊழல் மூலம் ஏழைகளின் பணத்தை சுரண்டியவர்கள் இன்று எனக்கு எதிராக கை நீட்டுகிறார்கள்.
கறுப்பு பணத்துக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்துள்ளது. இதுவரை வங்கிகளில் 5 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக மறு ஆய்வு செய்து உரிய மாற்றங்களை செய்வேன்.’ என்று கூறினார்.
மேலும் வரும் 2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்குள் அனைத்து இந்தியர்களுக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான ஏழைகளுக்கான ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ வீட்டு வசதி திட்டத்தை தொடங்கியுள்ளோம். அனைத்து வீடுகளுக்கும் சமையல் காஸ் இணைப்பும் வழங்கப்படும்.