பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகக்கோப்பையை பாகிஸ்தானுக்கு பெற்றுத்தந்தவருமான இம்ரான்கான் பாகிஸ்தானின் அரசியலிலும் கலக்கி வருகிறார். இவருக்கு உறுதுணையாக இவருடைய மனைவி ரேகம் கான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரேகம்கான் கல்வி சான்றிதழ் போலியானது என்ற புகாரை பாகிஸ்தானின் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் எழுப்பியுள்ளார்.
இம்ரான்கான் மனைவி ரேகம்கான் வடக்கு லின்டே கல்லூரியில் ஊடக இதழியலில் பட்டம் வாங்கி இருந்ததாக கூறி இருந்தார். ஆனால் அப்படிப்பட்ட படிப்பு அந்த கல்லூரியிலே இல்லை என்றும், மேலும் அந்த கல்லூரியில் ரேகம்கான் பெயர் பதிவு செய்யப்படவும் இல்லை என்றும் இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆங்கில இணையதளம் டெய்லி மெயில் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் ரேகம்கான் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சர்ச்சை பாகிஸ்தான் நாட்டில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ரேகம்கானின் உண்மையான கல்வித்தகுதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரேகம்கான், “ஊடக இதழியலில் நான் பட்டம் வாங்கியதாக ஒருபோதும் கூறவில்லை. கிரிம்ஸ்பி இன்ஸ்டிடியூட் மீடியா சென்டரில் ஊடக இதழியலில் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். எனது எதிரிகளின் தூண்டுதல் பேரில் தீய நோக்கத்துடனும், அடிப்படை ஆதாரமின்றியும் டெய்லி மெயில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இம்ரான்கான் – ரேகம் திருமணத்தை முதன்முதலில் வெளியிட்டது டெய்லி மெயில் இணையதளம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.